அடுத்ததாக தருமபுரி அமைச்சருக்கு அர்ச்சனை... அதிமுக அமைச்சர்கள் மீது மு.க. ஸ்டாலினின் தொடரும் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Nov 18, 2020, 9:15 PM IST
Highlights

அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித் துறையைக் காப்பாற்றவில்லை என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
 

தருமபுரி மாவட்ட திமுக சார்பில்  'தமிழகம் மீட்போம்' தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் உயர்கல்வித் துறைக்கு அமைச்சர். அவர் பெயர் கே.பி.அன்பழகன். ஆனால், அவரால் உயர் கல்வித்துறைக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டுள்ளதா? குறைந்தபட்சம் உயர் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றாவது அவருக்குத் தெரியுமா? அண்ணா பல்கலைக்கழகத்தையே தமிழக அரசுக்கே சொந்தமில்லாமல் மடைமாற்றம் செய்யத் துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்தது,  அன்பழகனுக்குக் களங்கமா, இல்லையா? இந்தக் காரியத்தை சூரப்பா அமைச்சருக்குத் தெரிந்து செய்தாரா? தெரியாமல் செய்தாரா?


உயர்கல்விச் செயலாளரின் ஒப்புதலோடுதான் இந்த முயற்சிகளைச் செய்ததாக சூரப்பா சொன்னார். அதற்கு அன்பழகனின் பதில் என்ன? அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகே, திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல தமிழக அரசு மாட்டிக்கொண்டது. நான் மட்டும் அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா சுருட்டிக் கொண்டு ஓடியிருப்பார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சூரப்பா சேர்த்ததை அமைச்சர் அன்பழகன் எதிர்த்தாரா?


சூரப்பாவின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டது அமைச்சர் அன்பழகனுக்குத் தெரியுமா? தெரியாதா? அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தை ஏற்க வைக்க அமைச்சர் அன்பழகனால் முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தையே ஏற்றுக்கொள்ள வைக்க அவரால் முடியவில்லை. அதற்கு முன்பாகவே மாணவர்களின் மனித தெய்வம் என்று விளம்பரம் செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த உத்தரவை அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஏற்காதபோது அதிமுக அரசு என்ன செய்தது?
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். அதை அமைச்சர் அன்பழகன் மறுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கர்நாடகாவைச் சேர்ந்தவர், சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்தவர், இசைப் பல்கலைக்கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்தவர் என வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே ஆளுநர் நியமிக்கும்போது அதிமுக அரசு தட்டிக் கேட்டதா? கரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை நோயாளிகள் தங்க வைக்கும் முகாமாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. ஆனால், அதை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. உயர் கல்வித்துறை அமைச்சரின் அதிகாரமே அவ்வளவுதான்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித் துறையைக் காப்பாற்றவில்லை. அமைச்சர் பதவிக்கான அதிகாரத்துடனும் செயல்படவில்லை. மொத்தத்தில் அமைச்சர் என்று சொல்லிக்கொள்ள எதுவும் செய்யவில்லை” என்று மு.க. ஸ்டாலின் பேசினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மு.க. ஸ்டாலின் பேசும்போது, அந்தந்த மாவட்ட அமைச்சர்களை விமர்சித்துவருகிறார். அந்த வகையில் இன்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரை மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
 

click me!