
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் அதிமுக சார்பில் பதவியேற்ற கவுன்சிலர்கள் செல்லூர் ராஜு வாழ்க.. ஜெயலலிதா வாழ்க என கூறி பதவியேற்றதுடன், எடப்பாடி பழனிச்சாமி- ஓபிஎஸ் பெயரை தவிர்த்திருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு அக்கட்சியின் தலைமைகளை காரணம் என அதிருப்தி நிலவி வரும் நிலையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரின் பெயரைத் தவிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்றிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது, கட்சிக்கு ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் அக்காட்சி கட்டுக்கோப்பை இழந்து வருகிறது, ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையால் அதிமுகவை ஆளுமைமிக்க ஜெயலலிதாவை போலவோ, எம்ஜிஆரைப் போலவோ கட்டுக்கோப்பாக வழி நடத்த முடியவில்லை. இந்நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியைக் கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. மொத்தத்தில் அதிமுக காலப்போக்கில் கற்பூரம் போல கரைந்து வருகிறது என்ற விமர்சனமும் அக்காட்சியின் மீது எழுந்துள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை அதிமுகவை தவறாக வழிநடத்துகிறது, அதுதான் தோல்விக்கு காரணம் என்று பலரும் பொருமி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி 3 நகராட்சிகள் 5 பேரூராட்சிகள் என 322 உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலை பொறுத்த வரையில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் 67 கவுன்சிலர்களும், காங்கிரஸ் சார்பில் ஐந்து கவுன்சிலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 கவுன்சிலர்களும், மதிமுக சார்பில் 3 கவுன்சிலர்களும், விடுதலை சிறுத்தைகள் 1 என மொத்தம் 80 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். இதேபோல் அதிமுக சார்பில் 15 கவுன்சிலர்களும், பாஜக சார்பில் 1 கவுன்சிலரும், சுயேட்சைகள் 4 பேர் என மொத்தம் 100 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐஏஎஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது ஒவ்வொரு கட்சியினரும் அந்தந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான முழக்கங்களை எழுப்பி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். திமுக சார்பில் பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்கள் கலைஞர் வாழ்க.. ஸ்டாலின் வாழ்க.. உதயநிதிஸ்டாலின் வாழ்க என கூறி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதேபோல் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் அழகிரி ஆதரவாளர்கள் இறைவன் கலைஞர் வாழ்க, மு.க அழகிரி, முக ஸ்டாலினுக்கு நன்றி என கூறி பதவியேற்றனர். பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என்று கூறினார்களே தவிர பெரியார் அண்ணாவின் பெயரை உச்சரிக்க வில்லை இதுதான் திராவிட மாடலா என பலரும் திமுகவினரை விமர்சித்தும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இதேபோல அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கையில் செல்லூர் ராஜூ வாழ்க... ஜெயலலிதா வாழ்க என முழக்கமிட்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ்சின் பெயரை அவர்கள் குறிப்படவே இல்லை. இது தற்போது அக்கட்சியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் மதுரை என்றால் அழகிரி என்பதுபோல அதிமுகவை பொறுத்தவரையில் மதுரை என்றால் செல்லூர் ராஜூ தான் என்பதில் சந்தேகம் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலும் மதுரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்தான் சல்லூர் ராஜூ, அது தற்போதும் தொடர்கிறது. ஓபிஎஸ் இபிஎஸ் அதிமுகவின் தலைமைகளாக இருக்கலாம், ஆனால் மதுரையை பொருத்தவரையில் செல்லூர் ராஜுவின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுகவை பொறுத்தவரையில் அங்கே செல்லூர் ராஜு வைத்ததுதான் சட்டம். அதானல் தான் அவர் அதிமுகவில் ச சிகலாவை இணைப்பது தொடர்பாக கூறி வரும் கருத்துக்கள் அதிமுக முக்கியத்துவம் பெற்றுவருகிறது என்பதை காணலாம். எனவே அங்கு ஓபிஎஸ் இபிஎஸ் எல்லாம் சும்மா என்பதைதான் மதுரை கவுன்சிலர்களின் பதவி பிரமானம் காட்டுகிறது.