தென் மாவட்டங்களில் ரவுண்ட் அடிக்கும் சசிகலா...!அதிமுகவை கைப்பற்ற தீவிர முயற்சி...!

By manimegalai aFirst Published Mar 3, 2022, 9:58 AM IST
Highlights

தென் மாவட்டங்களில் சசிகலாவின் திடீர் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும், விருப்பு, வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நம் இயக்கத்தை, சரிசெய்து, மீண்டும் தொண்டர்களுக்கான இயக்கமாக விரைவில் மாற்றிக் காட்டுவோம். அதிமுக நிலை மாறும், தலை நிமிரும் என கடந்த மாதம் தான் கூறியிருந்தார் சசிகலா.. அதற்கு ஏற்றார் போல் சசிகலா மீண்டும் வர வேண்டும் என அதிமுகவினர்   மறைவாக  பேசி வந்த நிலையில்  தற்போது நேரடியாகவே பேச தொடங்கியுள்ளனர். அதிமுக-அமமுக என இரு பிரிவாக இருப்பதால் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இரண்டு கட்சிகளும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அதிமுகவினரின் எண்ணமாக உள்ளது.  அதிமுகவில் ஏற்பட்ட பிளவு திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சாதகமாக மாறியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு மீண்டும் அமமுகவை சேர்க்க வேண்டும் என்ற முழக்கம் அதிமுகவில் எழுந்த நிலையில் அதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமல் இருந்தார்.  அப்படி யாரேனும் குரல் கொடுத்தால் கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை தான் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மீண்டும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற கோஷம் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக சசிகலா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும்  நிலையில் சசிகலாவை புறக்கணித்தது அதிமுகவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் மட்டுமே தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் சசிகலா நாளை முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 


நாளை காலை தியாகராயநகர் இல்லத்தில் இருந்து புறப்படும் சசிகலா விமானம் மூலம் தூத்துத்குடி சென்றடைகிறார். அங்கிருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டு நாட்கள் சுற்றுபயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்கவுள்ளார். அப்போது அதிமுகவில் தலைமையேற்க வேண்டும் என தங்களது கோரிக்கையை அதிமுகவினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பயணத்தின் போது பல்வேறு  கோயில்களில் சிறப்பு தரிசனத்திலும் சசிகலா கலந்து கொள்கிறார். சசிகலா மீண்டும் அதிமுக தலைமையேற்க வேண்டும் என எழுந்துள்ள குரல்களுக்கு மத்தியில்  சசிகலாவின் திடீர் சுற்றுப்பயணம் அதிமுக மூத்த நிர்வாகிகளை உற்று நோக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

click me!