கர்நாடகா வரை கலங்கடிக்கும் வெட்டுக்கிளி... தமிழகத்திலும் தலைகாட்டுமா..? 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published May 29, 2020, 4:37 PM IST
Highlights

டெல்லி, பிகார், ஒடிசா உள்பட மேலும் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கலாம் எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி, பிகார், ஒடிசா உள்பட மேலும் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கலாம் எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளிகள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. தொடர்ந்து, இவ்வாண்டும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தாக்குதலை ஏற்படுத்த கிளம்பியிருக்கிறது வெட்டுக்கிளி படை. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை செல்ல முடியும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 35,000 பேர் உண்ணக்கூடிய உணவை உண்ணும் தன்மை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 100 மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து தலைநகர் டெல்லி முதல் கர்நாடகம் வரை வெட்டுக்கிளிகள் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து மற்றொரு திரளான வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, டெல்லி, பிகார், ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.கே.கவுண்டல் கூறுகையில், வெட்டுக்கிளி நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் கட்டுப்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். அதேபோன்று, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அல்லது அதன் நடவடிக்கைகள் குறித்து அறியும் விவசாயிகள் அருகில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். 

தற்போது, ​​பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ‘ஹாப்பர் பேண்ட்ஸ்’முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆர்கனோபாஸ்பேட் ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

click me!