ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்... தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடு..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2021, 2:44 PM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. ஆனால் வரும் ஆக்ஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வானவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 22-ந்தேதி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், “இனி கால அவகாசம் தர முடியாது. செப்டம்பர் 15-ம்தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைய அநேகமாக ஒரு மாத காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்போதே தயாராகி வருகின்றனர்.

click me!