சட்டப்பேரவையில் ஜெய்ஹிந் மிஸ்ஸிங்..! உள்துறை அமைச்சகத்திற்கு சென்ற ரிப்போர்ட்.. கண்காணித்த உளவுத்துறை..!

By Selva KathirFirst Published Jun 29, 2021, 2:12 PM IST
Highlights

ஒன்றிய அரசு என்று கூறுவதால் யாரும் மிரள வேண்டாம், அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ளதை தான் தமிழக அரசு கூறுகிறது, இனியும் கூறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் இறுதியில் வழக்கமாக கூறப்படும் ஜெய்ஹிந்த் இந்த ஆண்டு சொல்லப்படாமல் போனது பெரும் சர்ச்சையானதுடன் அது விசாரணைக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறது.கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த இவ்வாறு கூறுவதாக திமுக அரசு தெரிவித்து வருகிறது. அத்தோடு ஒன்றிய அரசு என்று கூறுவதால் யாரும் மிரள வேண்டாம், அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ளதை தான் தமிழக அரசு கூறுகிறது, இனியும் கூறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்தார். இதே கூட்டத் தொடரில் தான் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசினர். அதில் திருச்செங்கோவும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் பேச்சு தான் சர்ச்சையானது.

வழக்கமாக ஆளுநர் உரை முடிந்த பிறகு ஜெய்ஹிந்த் என்று கூறப்படும். ஆனால் இந்த முறை ஆளுநர் உரையை முடிக்கும் போது அப்படி கூறப்படவில்லை. இதனை தனது சட்டப்பேரவை உரையில் ஈஸ்வரன் சுட்டிக்காட்டி தமிழக அரசை பாராடடினார். அத்தோடு ஜெய்ஹிந்த் என்கிற வாசகம் இல்லாத ஆளுநர் உரை மூலம் தமிழகம் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கான சூழல் தெரிவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். ஈஸ்வரனின் இந்த கருத்து தான் தற்போது பெரும் சர்ச்சையாகி உளவுத்துறை, உள்துறை அளவிற்கு சென்றுள்ளது. ஜெய்ஹிந்த் என்பது விடுதலை போராட்ட காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இனம், மொழி, மதம் கடந்து சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய வாசகம் ஆகும்.

அதனை சட்டப்பேரவையில் சொல்லாததை பெருமையாக கூறிய ஈஸ்வரன் இந்தியன் தானா என கேள்விக்கணைகள் அடுக்கப்பட்டன. அத்தோடு இந்த விவகாரத்தில் திமுக அரசு அமைதியாக இருப்பதை சுட்டிக்காட்டியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் ஜெய்ஹிந்த் வாசகத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ பேசியிருப்பது எதிர்காலத்தில் பிரிவினை பேச்சுகளுக்கு வழிவகுக்கும் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக சொல்கிறார்கள். மேலும் இது தொடர்பாக ஈஸ்வரன் ஊடகங்களுக்கு அளித்த விளக்கங்களையும் உளவுத்துறை பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் அதுவும் சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வாசகம் சொல்லப்படாதது மற்றும் அதனை அடிப்படையாக வைத்து எம்எல்ஏ ஈஸ்வரன் பேசியது தொடர்பான ரிப்போர்ட்டை உள்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். எனவே இது தொடர்பாக விரைவில் சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!