
அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியதால் தான் திமுக சரிசமமான வெற்றியை பெற்றது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதனையடுத்த, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முறைகேடு குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு தில்லுமுல்லு செய்து திமுகவின் வெற்றி பெற்றுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்களது வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால், திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிபடுத்தவும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சரியாக பணியாற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளனர். ஐந்து மாத ஆட்சியில் அடிக்கப்பட்ட கொல்லை பணத்தை வைத்துதான் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேஷ்டி, புடவை, எவர்சில்வர் கொடுத்து திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியதால் தான் திமுக சரிசமமான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் விலைவாசி உயர்வே திமுகவின் சாதனையாகும். மேலும், திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.