
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் முடிந்து ஓராண்டாகி விட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் நடந்தது. ஆனால் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்பதால் மறு அறிவிப்பு வெளியிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதன்பிறகு ஜெயலலிதா இறந்துவிட்டதால் தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை சந்திக்க ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
எனினும் இதற்கிடையே உள்ளாட்சித்தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் சில முறை உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலை மேலும் தள்ளிப்போடுவதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கிவிட்டது. வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில், வார்டு மறுசீரமைப்பு ஆணையத்தின் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
அதில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் பங்கேற்றனர். வார்டு மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு ஒழிப்பு, பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் வார்டு மறுவரையறை பணிகள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. இதை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.