
இனி வரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றியைப் பெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார். காஞ்சிபுரம் 51-வது வார்டில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஓபிஎஸ் பேசும்போது, “திராவிட இயக்க பரிணாம வளர்ச்சியடைய காரணமாக இருந்த அண்ணா பிறந்த மண்ணில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளேன்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தார். தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுகதான். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சில பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வருகிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்புடன் நூறு ரூபாய், பிறகு ஆயிரம் ரூபாய் கடந்த ஆண்டு 2500 ரூபாயை வழங்கியது அதிமுக ஆட்சி. திமுகவினர் மக்களை தற்போது நேரடியாகச் சந்திக்க முடியாத நிலையில்தான் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால், அதை செய்யவில்லை.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு நூறு சதவீதம் அதிமுகவுக்கு வழங்குவார்கள். இனி வரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றியைப் பெறும். நாம் மகத்தான வெற்றியைப் பெற வேண்டுமெனில் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை கட்சி தொண்டர்கள் நிற்கும் தேர்தல். சிறிய வித்தியாசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்தோம். ஆனால், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு நாம் யார் என்பதையும் நம்முடைய பலத்தையும் நிரூபித்து காட்ட வேண்டும்” என ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.