திமுகவை காப்பி அடித்தார் ஜெயலலிதா... இப்போது எடப்பாடியும் காப்பி அடிக்கிறார்..? உள்ளாட்சித் தேர்தலை உல்டாவாக்கும் மர்மம்!

By Asianet TamilFirst Published Nov 20, 2019, 7:04 AM IST
Highlights

2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஏற்கனவே இருந்ததுபோல மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். ஆனால், அதே ஜெயலலிதா 2016-ல் திமுக 2006-ல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களைப் பிடித்ததால், போட்டி பலமாக இருக்கும் என்ற காரணமாக  உள்ளாட்சித் தேர்தல் ஃபார்முலாவில் ஜெயலலிதா திமுகவை ஃபாலோவ் செய்ய முடிவெடுத்தார். 

உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றியை மட்டும் மனதில் கொண்டு சட்டத்தை மாற்றும் போக்கு ஆளுங்கட்சிகளிடம் தொடர்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1986-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெற்றன. அப்போது  நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோதே அந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தேறியது. அந்த உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகு 91-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
பத்து ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர்களின் பதவிகள் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்போது சென்னை  மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 2001-ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 1996-ல் நடைபெற்றதைப்போலவே உள்ளாட்சி தேர்தல் மாற்றமின்றி நடைபெற்றது.

 
அந்தத் தேர்தலில் பல மாநகராட்சிகளை அதிமுக வென்றபோதும் சென்னை மாநகராட்சியில் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இது ஜெயலலிதாவுக்கு உறுத்தலாகவே இருந்தது. பிறகு ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தைக் கொண்டு வந்து மு.க. ஸ்டாலினை பதவியிலிருந்து விலக வைத்தார் ஜெயலலிதா. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேயர், நகராட்சித் தலைவர் பொறுப்புகளை கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதிமுகவுக்கு மேயர், நகராட்சித் தலைவர் பதவி செல்லக் கூடாது என்பதற்காக அப்படியொரு முடிவை திமுக எடுத்தது. அந்தத் தேர்தலில்தான் முறைகேடுகள் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சியின் 99 வார்டுகள் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததும் நடந்தேறியது.


கவுன்சிலர்கள், மாற்று கட்சியினர், சுயேட்சைகளின் உதவியுடன் மேயர்,  நகராட்சித் தலைவர் பதவிகளைப் பிடிக்கும் உத்தியில் திமுக அப்போது சட்டத் திருத்தம் கொண்டுவந்ததாகப் பரவலாகப் பேசப்பட்டது. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஏற்கனவே இருந்ததுபோல மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். ஆனால், அதே ஜெயலலிதா 2016-ல் திமுக 2006-ல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களைப் பிடித்ததால், போட்டி பலமாக இருக்கும் என்ற காரணமாக  உள்ளாட்சித் தேர்தல் ஃபார்முலாவில் ஜெயலலிதா திமுகவை ஃபாலோவ் செய்ய முடிவெடுத்தார். ஆனால், அப்போது  தடை காரணமாகத் தேர்தல் நடைபெறாமலேயே போனது.


தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு, மேயர், நகராட்சித் தலைவர் பதவியை மக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாயின. அதாவது, திமுக ஆட்சியில் 1996, அதிமுக ஆட்சியில் 2001, 2011-ம் ஆண்டுகளில் நடந்ததைப் போல மக்கள் நேரடியாக மேயர், நகராட்சித் தலைவர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், தற்போது 2006 திமுகவும், 2016-ல் ஜெயலலிதாவும் எந்தக் காரணத்துக்காக கவுன்சிலர்கள் மூலம் தலைவர்களை தேர்வு செய்ய முடிவெடுத்தார்களோ, அதே பாணியில் மேயர், நகராட்சித் தலைவர்களைத் தேர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவது குறித்து தமிழக அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
ஆக, திமுக, அதிமுகவின் கட்சி நலனுக்காகவே உள்ளாட்சித் தேர்தல்களில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுவது என்பது தொடர்கதையாகிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

click me!