விடியலை தருவோம்னு சொன்னாங்க.. மக்களை வஞ்சித்துட்டாங்க.. திமுக அரசுக்கு எதிராக மாஜி அமைச்சர் தாறுமாறு..!

Published : Jul 25, 2021, 09:09 PM IST
விடியலை தருவோம்னு சொன்னாங்க.. மக்களை வஞ்சித்துட்டாங்க.. திமுக அரசுக்கு எதிராக மாஜி அமைச்சர் தாறுமாறு..!

சுருக்கம்

விடியலை தருவோம் எனக்கூறிய திமுக மக்களை வஞ்சித்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.   

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தற்போது திமுக திசை மாறுகிறது. இந்த அரசுக்கு கடிவாளம் போடும் வகையிலும் நிர்வாக சீர்கேட்டை பொதுமக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையிலும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இல்லங்கள் முன்பு கண்டன பதாகைகளை ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த கட்சி தலைமை அறிவித்துள்ளது. மதுரை மேற்கில் அனைத்து கிராமங்களிலும் இல்லங்கள் முன்பு உரிமைக்குரல் எழுப்புவோம். விடியலை தருவோம் எனக்கூறிய திமுக மக்களை வஞ்சித்துவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். அத்தேர்வை ரத்து செய்யும் சூத்திரம் எங்களுக்குத் தெரியும் என சத்தியம் செய்தார்கள். ஆனால், வாக்களித்த மக்களை வஞ்சித்துவிட்டனர். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1000 வழங்கும் உதவித் தொகை திட்டம் என்ன ஆனது? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி நாணயத்துடன் திமுக அரசு நடக்க வேண்டும். திமுகவின் அலட்சியத்தால் கிராமப்புறங்களில் விவசாயிகள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.
அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு மலிவான அரசியலை திமுக செய்துகொண்டிருக்கிறது. அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை சேதப்படுத்த நினைக்கும் திமுகவுக்கு தோல்விதான் கிடைக்கும். லாட்டரியை மீண்டும் கொண்டு வந்தால், கள்ள லாட்டரியும் வந்துவிடும். சாமானிய மக்கள் பாதிக்கப்படுவர். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துசொன்னோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, திமுக அரசின் குளறுபடிகள், ஏமாற்று நாடகத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

DMK Alliance: திமுக கூட்டணி ஆட்சி அமைத்து, தமிழகத்தில் வரலாறு படைக்கும்: கிரிஷ் சோடங்கர்
Tamil Nadu Assembly Election Results 2026: தபால் வாக்குகளில் முன்னிலைப் பெறும் திமுக..!