மேற்கு வங்கம் போல உ.பி.யிலும் செஞ்சிடுவோம்.! அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் மம்தா பானர்ஜி!

By Asianet TamilFirst Published Jan 20, 2022, 7:43 AM IST
Highlights

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அக்கட்சி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்குகிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10- இல் தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உ.பி.யில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளை நாடே எதிர்நோக்கியிருக்கிறது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என நான்கு கூட்டணிகள் முக்கியமாக களமிறங்கியுள்ளன. என்றாலும் பாஜக - சமாஜ்வாடி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் கோவாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. இதேபோல உ.பி.யிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் என்று பேசப்பட்டது. அக்கட்சியும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியது. 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. மேலும் இத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாகவும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் துணைத் தலைவர் கிரண் நந்தா கூறுகையில், “மம்தா பானர்ஜி, காணொலி வாயிலாகப் பிரசாரம் மேற்கொள்ள வாரணாசி வர இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு  ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவது என்று பாஜக முனைப்புக் காட்டியது. தேர்தலில் மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் மம்தா பானர்ஜி பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். தவிர 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அக்கட்சி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!