ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியே தீருவோம்..!! அதிமுகவை கதிகலங்க வைத்த திமுக தீர்மானம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2020, 11:55 AM IST
Highlights

426 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை,  உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தி படுதோல்வி,  அந்நிய முதலீடு திரட்டச்சென்ற தோல்வி, 

மக்கள் விரோத அதிமுக ஆட்சியை வீழ்த்தி,  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை முதலமைச்சராக பொறுபேற்க செய்திட சூளுரை மேற்கொள்வோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர் பாலு உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67  இடங்களிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலு ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். ஆகையால் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக அப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொருளாளராக தேர்வான டி.ஆர் பாலுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறினார். அதேபோல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் 12வது தீர்மானமாக அதிமுக ஆட்சியை வீழ்த்திவிட்டு திமுகவை ஆட்சி பீடத்தில் ஏற்றிடவும், கட்சித்  தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க செய்திடவும் சூளுரை மேற்கொள்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அத்தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- 

கூவத்தூர்  கூத்தின் மூலம் கோட்டை ஏறிய தற்போதைய அதிமுக அரசு, ஊழல், ஊதாரித்தனம் ஆகியவற்றின் உருவமாகி தமிழக மக்களை தனியாக இன்னல்களில் தள்ளி, மக்கள் விரோத அரசாக கமிஷன், கரப்ஷன், கலெக்சன், என்ற ஒரே நோக்கத்திற்காக செயல்பட்டு, மக்களுக்கான பணியில் முற்றிலும் தோற்றுவிட்டதொரு நிர்வாகத்தை நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல், ஆரவாரமான வெற்று அறிவிப்புகள்,  மும்மொழித் திட்டத்தைத் இணைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு  கைலாகு,  இந்தி திணிப்பிற்கு மறைமுக ஆதரவு.  நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியாமல் அந்த தேர்வு காலத்தில் நடத்துவதை கூட எதிர்க்க இயலாத போக்கு.  விவசாயிகளுக்கு  எதிரான சேலம் எட்டு வழி சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்ற இரக்கமற்ற போக்கு,  நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறிவிட்டு இதுவரை அவசர சட்டம் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவது. 

தேர்வு கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மறுப்பு,  பத்திரிக்கைகள் மீது அடக்குமுறை, நேரடி கொள்முதல் நிலையங்களை போதிய அளவு திறக்காமல் விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியது, 426 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை,  உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தி படுதோல்வி,  அந்நிய முதலீடு திரட்டச்சென்ற தோல்வி, ஆடம்பரச் செலவுகளை பேரிடர் கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று முதலீடு வராத ஒப்பந்தங்களை ஏற்றி, ஏமாற்றி நாடகம், தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, 4.56 லட்சம் கோடி ரூபாய் கடன், நிதி நெருக்கடி,  நாள்தோறும் கொலை, கொள்ளைகள், ஜெயராஜ், பினிக்ஸ் உள்ளிட்டோர் காவல்நிலைய மரணங்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 எதிர்க்க இயலாமை என அதிமுக அரசின் தோல்விகளை வரிசை படுத்தினாலும் பட்டியல் முற்றுப்பெறாமல் நீண்டுகொண்டே போகும். 

ஆகவே இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத, சட்ட விரோத அதிமுக ஆட்சியை சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் வீழ்த்தி, திமுகழகத்தை ஆட்சி பீடம் ஏற்றவும்,  கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக ஆட்சியில் அமர்த்தவும், தமிழகத்தை மீண்டும் முன்னேற்ற வளர்ச்சிப் பாதையில் செலுத்தவும் அரும்பாடுபடுவதென இந்தப் பொதுக்குழு சூளுரை மேற்கொள்கிறது, என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!