6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2020, 10:23 AM IST
Highlights

ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற கருணாநிதியின் நினைவுநாளில் சூளுரை ஏற்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற கருணாநிதியின் நினைவுநாளில் சூளுரை ஏற்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த தலைவர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் 'எங்கெங்குக் காணினும் கலைஞர்!' என்ற காணொலியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அக்காணொலியில், ''இன்னும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம் உயிரினும் மேலான அன்புத் தலைவர் நம்மோடு இல்லை என்பதை... வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு கடல் அலையின் தாலாட்டில் அவர் நீடு துயில் கொள்ளச் சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்ததே, இரண்டு யுகங்களைக் கடந்தது போலத்தான் இருக்கிறது.

திரும்பும் திசையெல்லாம் கருணாநிதியே தெரிகிறார். எனது கண்களில் படுவது அனைத்தும் கருணாநிதியின் பிம்பமாகவே தெரிகிறது! அவர் முகம் - அவர் உருவம் - அவர் குரல் என்று எங்கு நோக்கினும் கருணாநிதியே இருக்கிறார். ஜூன் 3 - கருணாநிதியின் பிறந்தநாள் மட்டுமல்ல. இந்த இனம் எழுச்சி பெற்ற நாள். புதிய தமிழ் பிறந்தநாள். இதோ இன்று ஆகஸ்ட் 7. அவர் மூச்சொலி நின்ற நாள் மட்டுமல்ல.

கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் மூச்சுக் காற்றும் நின்று துடித்த நாள். 'நலமாய் இருக்கிறார்' என்ற ஒற்றை வார்த்தைக்காக உலகமே தவம் இருந்தது. 'மிக நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்' என்றவர் அவர். 95 ஆண்டுகள் என்பது மிகமிக நீண்ட தூரம். அவர் தாண்டிய உயரமும் அதிகம். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர். 5 முறை இந்த மாநிலத்தின் முதல்வர். ஐம்பது ஆண்டு காலம் திமுகவின் தலைவர்.

இந்தப் பதவிகளை வைத்து வாழ்ந்தவர் அல்ல; தமிழ்நாட்டை வாழ வைத்தவர் கருணாநிதி. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் கருணாநிதி செய்து கொடுத்த உதவிகள், நிறைவேற்றிய திட்டங்கள், நிறைவேற்றிய சாதனைகள் நிறையவே இருக்கின்றன. அவர் செய்த சாதனைகளின் மூலமாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவருடைய பெயர் இந்த நாட்டில் நினைவு கூரப்படும். அவர்தான் ஒருமுறை சொன்னார், 'ஒருவனின் வாழ்க்கை என்பது, அவனது மரணம் அடைந்த நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும்' என்று!

உண்மையில் கருணாநிதியின் புகழ், அவர் மறைந்தும் நிறைந்தும் வாழத் தொடங்கிய 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாளுக்குப் பிறகுதான் மேலும் மேலும் அதிகம் ஆனது. சிலவற்றை மட்டும் நினைத்துப் பார்க்கிறேன்! தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி!  மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை!  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம்!  மகளிருக்கும் சொத்தில் சம பங்குண்டு என்ற சட்டம்! பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!  கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து! சென்னை தரமணியில் டைடல் பார்க்! சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்! தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்! 'நமக்கு நாமே' திட்டம்!  அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்!  அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம்! இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!  மினி பேருந்துகள்! உழவர் சந்தைகள்! சமத்துவபுரங்கள்! ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம்! கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம்! கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் திட்டம்! பல்லாயிரம் கோவில்களுக்குத் திருப்பணிகள்! அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு!

 உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33 சதவிகிதம் இடஒதுக்கீடு! இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்! மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்! முஸ்லிம் சமூகத்தினருக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது! உருது பேசும் முஸ்லிம்களை, பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது! நுழைவுத் தேர்வு ரத்து! மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கியது! சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை உருவாக்கம்!

 மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல்! ஏராளமான பல்கலைக்கழகங்கள்! மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்! ஏராளமான கலை - அறிவியல் கல்லூரிகள்! வேளாண் பல்கலைக்கழகம் வள்ளுவர் கோட்டம்.பூம்புகார் கலைக்கூடம். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை. குமரி முனையில் வள்ளுவருக்குச் சிலை. இவை அனைத்தையும் ஒரே மனிதர்தான் செய்து காட்டினார் என்பதை வரலாறு நம்ப மறுக்கும்! ஆனால் ஒரே மனிதர்தான் செய்து கொடுத்தார்.

அவர் செய்ததில் பத்தில் ஒரு பங்கைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். அவர் இந்த நாட்டு மக்கள் மீது வைத்த பற்றுதான் இவை அனைத்துக்கும் காரணம்! அவர் பிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்! திமுக தலைவராக ஆனது வேண்டுமானால் 1969-ம் ஆண்டாக இருக்கலாம்! மிகச் சிறுவயதில் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் தொடங்கித் தலைவராய் இருந்தவர். இளம்வயதில், தமிழ்நாடு மாணவர் மன்றம் தொடங்கி, தமிழகத் தலைவராக இருந்தவர். அப்படி, அவர் பிறக்கும் போதே தலைவராகப் பிறந்தார்! அவர் பிறக்கும் போதே எழுத்தாளராகப் பிறந்தவர். அதுவும் பத்திரிகை ஆசிரியராகப் பிறந்தவர்!

அடுத்தவர் நடத்தும் பத்திரிகைக்கு அனுப்புவதை விட, தனது சொந்தப் பத்திரிகையிலேயே வெளியிட்டுக் கொள்ளும் அளவுக்கு, சிறு வயதிலேயே பத்திரிகை அதிபராய் வாழ்ந்தவர். அவர் பிறக்கும் போதே நாடகக் கலைஞர்! அதுவும், அடுத்தவர் வசனத்தைப் பேசிய கலைஞர் அல்ல. சொந்தமாய் கதை - வசனம் எழுதி நாடகங்கள் போட்டவர். அவரால் எழுத்தாளர் ஆனவர் உண்டு! அவரால் பேச்சாளர் ஆனவர் உண்டு! அவர் வசனத்தைப் பேசியே நடிகர் ஆனவர்கள் அதிகம்! எப்படிப் பார்த்தாலும், அவர் ஒரு சகாப்தம்.

கருணாநிதி, ஒருமுறை கோட்டூர்புரத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டார். துடித்துப் போனார் அண்ணா. அருகில் இருந்தவர்களைப் பார்த்து, 'தம்பி கருணாநிதியை எப்படி தனியாக விட்டீர்கள்? கருணாநிதியின் உயிர், அவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாட்டுக்குச் சொந்தம். எத்தனையோ பேர் வரலாம். போகலாம். ஆனால், இன்னொரு கருணாநிதியை நான் பெற முடியாது' என்றாராம். அண்ணாவே சொன்ன பிறகு நாம் என்ன சொல்வது!

இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஏராளமான வெற்றியைப் பெற்றுள்ளோம். சட்டப்பேரவையிலும், நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுகவின் வலிமை உயர்ந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக அமர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். டெல்லி நாடாளுமன்றம் முதல், குக்கிராமத்து ஊராட்சி வரைக்கும் திமுகவினர் செல்வாக்கு உயர்ந்து வருகிறது தலைவரே.

இனத்துக்கு ஒரு இடைஞ்சல் என்றால், முதல் குரல், நம் குரல் தான். மொழிக்கு ஒரு தடங்கல் என்றால் முதல் குரல், நம் குரல் தான்! திமுகவை வீழ்த்த வீண் அவதூறுகளையும், பொய்ப் புகார்களையும் புனை கதைகளையும் பரப்பி வருகிறார்கள். நாங்கள் தீயைத் தாண்டிக் கொண்டு இருக்கிறோம் நாட்டுக்காக! ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவுநாளில் சூளுரை ஏற்கிறோம் தலைவரே! தமிழ் மக்களுக்கு எதிரான மாநில அரசுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான மத்திய அரசுக்கு எதிராகவும் என, ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் சளைக்காமல் மோதிக் கொண்டு இருக்கிறோம். வெல்வோம் தலைவரே. அடுத்த நினைவுநாளில் சொல்வோம் தலைவரே.

'உத்தமத் தொண்டர்களின் ரத்தமே திமுக' என்றீர்கள். அந்த உத்தமத் தொண்டர்களின் சார்பில் வணங்குகிறேன் தலைவரே. 'ஸ்டாலின் என்றால், உழைப்பு! உழைப்பு! உழைப்பு!' என்றீர்கள்! உங்களைப் போல உழைக்க முயற்சிக்கும் இந்த எளியவன் ஸ்டாலினின் வணக்கம் தலைவரே." என அவர் கூறியுள்ளார். 

click me!