
ஏழை எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை காவலர்கள் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேலம் ஆத்தூர் அருகே விவசாயி போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜய காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்திற்குரிய செயல். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது தொடர்கதையாகி வருகிறது, மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவலர்களே மக்களின் உயிரைப் பறிப்பது எந்த விதத்தில் நியாயம். உயிரை பறிக்கும் வகையில் காவலர்கள் நடந்து கொள்வது என்பது மனிதாபிமானத்திற்கு முற்றிலும் ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும்.
காவலர்கள் தாக்கி உயிரிழப்பு சம்பவம் இதுவே இறுதியாக இருக்கட்டும். ஏழை எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை காவலர்கள் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் விவசாயி முருகேசன் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.