கொரோனா முடியட்டும், எல்லாத்துக்கும் முடிவு கட்டுறோம்.. போட்டுத் தாக்கிய போக்குவரத்து துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2021, 4:13 PM IST
Highlights

போக்குவரத்துக்கழக பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளும் எனது கவனத்திற்கு வந்துள்ளது, இந்தக் கொரோனா கால கட்டம் முடிந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
 

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், 

தமிழகம் முழுவதும் முன் களப் பணியாளர்களுக்கு உரிய  பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா.? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் முன் களப்பணியாளர்கள் தங்கள் பணிக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக உரிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன, ஒரு சில மாவட்டங்களில் கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த போக்குவரத்து கழக உயர் அலுவலர்களை, போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் என்னையோ அணுகும் பட்சத்தில் அதற்கு உடனடியாக ஆவணசெய்யப்படும். 

அவ்வாறு இயக்கப்படுகின்ற பேருந்துகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க, முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார். மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நிறம் மாற்றம் செய்யப்படுமா.? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் இந்த திட்டமானது, பெண்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் எளிதில் அடையாளம் காண வகையில் நிறமாற்றம் செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். போக்குவரத்துக்கழக பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளும் எனது கவனத்திற்கு வந்துள்ளது, இந்தக் கொரோனா கால கட்டம் முடிந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
 

click me!