Duraimurugan : எடப்பாடியாரே 10 ஆண்டுகள் பெட்டி சமாச்சார கதையை சொல்லட்டுமா.? ஒரு காட்டு காட்டிய துரைமுருகன்.!

By Asianet TamilFirst Published Dec 15, 2021, 7:54 PM IST
Highlights

எடப்பாடியார் அவருடைய சுபாவத்திற்கு மாறுபட்டு இந்த அரசை “விடியா அரசு”, “ஆளுங்கட்சியை கவனித்துவிட்டு”, “அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே போகிறது” என்றெல்லாம் கடினமான சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்.

மொட்டை பெட்டிஷன் மீது எல்லாம் அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். மொட்டை பெட்டிஷனிலும் “பெட்டி சமாச்சாரம்” நிறையவே உள்ளதே எதிர்க்கட்சித் தலைவரே” என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கல்குவாரி பர்மிட் முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”கனிமவளத்துறை என்றோர் துறை இருந்ததை முதலமைச்சராக இருந்த காலத்தில் மொத்தமாக ஒருவருக்கே குத்தகை விட்டுவிட்டு முன்னாள் முதல்வர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அளவிற்கு இத்துறையைப் பற்றி யார் மூலமோ தெரிந்துகொண்டு ஓர் அறிக்கை விட்டிருப்பதே பெரிய விஷயம்தான். கல் குவாரி நடத்துகிறவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப் போகிறோம் என்பதை விரிவான சுரங்கத் திட்டம் மூலம் அரசுக்கு தெரிவித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தமாக அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யூனிட்களுக்கு அரசாங்கத்திற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

அந்த 12 மாதத்திற்குரிய யூனிட்களை மொத்தமாக கணக்கிட்டு அதற்குரிய தொகையை மாதாமாதம் செலுத்தி பர்மிட் பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால், இவர் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் முந்தைய காலத்தில் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 12 மாதத்திற்குரிய தொகையை முழுவதையும் கட்டிவிடக் கூடாது என்றும் அரசுக்கு வருவாய் வந்துவிடக் கூடாது என்ற மகத்தான நலலெண்ணத்துடன் ஒரு நொண்டி காரணத்தை சொல்லி இருக்கிறார் முன்னாள் முதல்வர். அதாவது, பண்டிகை காலங்களில், குவாரிகளில் வேலை செய்கிறவர்கள் ஊருக்கு போய்விடுவார்களாம், அதனால் உற்பத்தி குறைந்து போகுமாம், அந்த நிலையிலும் அந்த மாதத்திற்குரிய தொகையை கட்டுகிறார்களாம் என்று குவாரிதாரர்களுக்காக பச்சாதாபப்படுகிறார்.

15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை பர்மிட் வழங்குவது அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறையில் இருந்தது. இதில் என்ன ஒரு தில்லுமுல்லு என்றால் 15 நாட்களுக்கு வழங்கிய பர்மிட்டில், ஒரு குறிப்பிட்ட நாளுக்கான பர்மிட்டையே 15 நாட்களுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரே பர்மிட்டை வைத்து பலமுறை முறைகேடாக கனிமம் கொண்டு சென்ற வாகனங்களை சமீபத்தில் இத்துறையின் இயக்குநரே நேரில் சென்று கைப்பற்றி அதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தகவல் உண்மையல்ல. தற்போதைய நடைமுறை மாற்றம் என்னவென்றால், குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த பர்மிட்டின் எண்ணிக்கைக்கேற்ப கால அவகாசம் மூன்று நாட்களுக்கு செல்லத்தக்க வகையில் பகுதி பகுதியாக மொத்தம் 15 நாட்களுக்கு ஒரே முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

 

எனவே, குத்தகைதாரர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்து பர்மிட் பெறவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. எடப்பாடியாருக்கு இப்போது புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். எடப்பாடியார் அவருடைய சுபாவத்திற்கு மாறுபட்டு இந்த அரசை “விடியா அரசு”, “ஆளுங்கட்சியை கவனித்துவிட்டு”, “அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே போகிறது” என்றெல்லாம் கடினமான சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். அவர் விரும்பினால் முந்தைய 10 ஆண்டுகளில் இந்தத் துறையின் கதைகளை விளக்கத் தயாராக இருக்கிறேன். மொட்டை பெட்டிஷன் மீது எல்லாம் அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். மொட்டை பெட்டிஷனிலும் “பெட்டி சமாச்சாரம்” நிறையவே உள்ளதே எதிர்க்கட்சித் தலைவரே” என துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

click me!