Thangamani Raid : தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை… ரூ.2.16 கோடி பறிமுதல்… சிக்கியது பல முக்கிய ஆவணங்கள்!!

By Narendran SFirst Published Dec 15, 2021, 6:41 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தங்கமணி வீட்டிற்கு புதன்கிழமை அதிகாலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு முன்புற கதவை தாழிட்டு தங்களது விசாரணையை தொடங்கினர். பள்ளிபாளையம் மட்டுமின்றி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்டம் -33 , சென்னை -14 , ஈரோடு -8 , சேலம் -4 , கோயம்புத்தூர் -2 , கரூர் -2 , கிருஷ்ணகிரி- 1 , வேலூர் -1 , திருப்பூர் -1 , பெங்களுர் -2 , ஆந்திர மாநிலம் சித்தூர் - 1 உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் 150க்கும் அதிமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த பிரபல கட்டுமான நிறுவனத்திலும் இச்சோதனை நடைபெற்றது. முன்னதாக 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019 சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் . 8/2021 u / s 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( e ) of the Prevention of Corruption Act , 1988 மற்றும் 109 IPC & 12 , 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( b ) of the Prevention of Corruption Act , 1988 as amended in 2018 என்ற பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

click me!