செந்தில் பாலாஜி என் மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது முதல்வர் ஸ்டாலினையும் கூண்டுக்குள் ஏற்றுங்கள் எனக் கேட்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, “முதல்வர் ஸ்டாலின் காவல் நிலையங்களுக்கு ஆய்வுக்கு சென்ற பின்னரே தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாயின. தமிழகத்தின் போலீஸாரின் கைகள் கட்டிப்போட்டு, திமுகவினர் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நூதனமான முறையில் ஊழலை தொடங்கியுள்ளார். மதுரையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியை ஒரே நாளில் திண்டுக்கல்லுக்கு மாற்றி, மீண்டும் மதுரைக்கே மாற்றி இருக்கிறார். தூத்துக்குடியில் உள்ள 2,500 ஏக்கர் நிலத்தை போலியாகப் பதிவுசெய்ததுகூட தெரியாமல், மதுரையில் ஜல்லி, மணல் எங்கு கிடைக்கும் என தேடிக் கொண்டிருக்கிறார்.
திமுக எம்.பி. டி.ஆர். பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறார். ஆனால், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரக் கூடாது என்கிறார். ஒரே மரத்தின் கீழ் நின்றுக்கொண்டு கள்ளை குடித்து விட்டு, இருவரும் இரு வேறு கருத்துக்களை பேசுகிறார்கள். மக்களை முட்டாளாக்குவதில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறந்த உதாரணம். இப்போது பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் இல்லத்தரசிகள் யார் என்று கண்டுபிடித்து கொண்டு இருக்கிறோம் என்கிறார் பி.டி.ஆர். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் 21 குழுவை உருவாக்கி சாதனை செய்துள்ளது திமுக அரசு. இனி 22 ஆவதாக ஒரு குழுவை உருவாக்கி, இல்லத்தரசிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படையுங்கள்.
முதல்வர் துபாய் சென்று வந்த பிறகு அமைச்சர்கள் எல்லோருமே வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். மின் துறை அமைச்சர் தற்போது ஸ்காட்லாந்து கடலில் காற்றாலை அமைப்பதை பார்வையிட சென்றுள்ளார். ஏனென்றால், கடலில் காற்றாலை போட்டால் அணில் ஏறி போய் கடிக்க முடியாது. தமிழகத்தில் கரண்டு கொடுக்கவே வழி இல்லை. சோலார் பிளான்ட் அமைக்க வேண்டுமென்றால் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். திமுக அரசின் ஊழல்களை வெளியே கொண்டு வந்ததற்காக என் மீது ஓராண்டில் மட்டும் 620 கோடி ரூபாய் அளவுக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி என் மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது முதல்வர் ஸ்டாலினையும் கூண்டுக்குள் ஏற்றுங்கள் எனக் கேட்பேன். அவர்தான் செந்தில் பாலாஜியை ஊழல் அமைச்சர் என குற்றம்சாட்டியவர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி பண மோசடி செய்ததற்காக அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. வேலையே இல்லாத காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் போய் சண்டை போட்டுவிட்டு சட்டை கிழிந்து விட்டது என்கிறார். சண்டையில் சட்டை கிழியத்தான் செய்யும். திமுக அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனத்தை பற்றி தவறாக பேச ஆரம்பித்த அன்றே கதை காலியாகிவிட்டது. பழைய சேகர் பாபுவை பார்ப்பீர்கள் என்று அவர் மிரட்டுகிறார். கோயில் உண்டியல் மீது திமுகவினருக்கு கண் என்று ஆதீனம் சொன்னதில் என்ன தவறு? ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள். மதுரை மக்களும், பாஜகவும், மோடியும் என்ன செய்வார்கள் என்பதைக் காட்டுவோம். ஆதீனத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆதீனம் மக்கள் பக்கம் நிற்கிறார். அதனால் அவர் பக்கம் பாஜக நிற்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.