சசிகலா வெளியேவரட்டும் அதன்பிறகு எந்த அமைச்சர் எங்கு இருக்கிறார் என்று பார்க்கலாம். தயாநிதி மாறன் நக்கல் பேச்சு

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 3:13 PM IST
Highlights

அதிமுக வெற்றி நடை போடுகிறது என்று தெரிவித்துவிட்டு தற்போது டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுக அமைச்சர்கள் நடையாய் நடக்கின்றனர். 

அதிமுக அமைச்சர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் எனவும், சசிகலாவை எதிர்த்து யார் பேசுவது என்பதில் அமைச்சர்கள் மத்தியிலேநே குழப்பமும் தயக்கமும் இருக்கிறது எனவும்  திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் அதிமுகவினரை வம்பிழுக்கும் வகையில் உள்ளது.

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வழக்கம்போல இந்த தேர்தலிலும் அதிமுக-திமுக இடையே நேரெதிர் போட்டி என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக தாக்கியும் விமர்சித்தும் வருகின்றனர். அந்த வரிசையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அதிமுக அமைச்சர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் யானை கவுனியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தயாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளார். திமுக தலைவரின் வழியை பின்பற்றி தான் தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுக வெற்றி நடை போடுகிறது என்று தெரிவித்துவிட்டு தற்போது டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுக அமைச்சர்கள் நடையாய் நடக்கின்றனர். சசிகலாவை எதிர்த்து யார் பேசுவது என்பதில் அதிமுக அமைச்சர்களுக்கே தயக்கம் இருக்கிறது. சசிகலா வெளியே வரட்டும் அதன் பிறகு ஜெயக்குமார் எந்த அணியில் உள்ளார் என்பதை பார்க்கலாம் என கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் தயாநிதி மாறன் கடுமையான விமர்சித்தார். 

 

click me!