
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ. லியோனி ஒரு பெரியாரிஸ்ட் ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்க மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். செருப்பை தலையில் தூக்கிச் சுமந்தவர்களை வணக்கத்திற்குரிய மேயராக அக்கியிருக்கிறோம் என திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. தேர்தல் கூட்டணியாக மட்டும் இன்றி கொள்கை கூட்டணியாக செயல்படுகிறோம் என திருமாவளவன் அடிக்கடி கூறி வருகிறார். அதே நேரத்தில் திமுக ஆட்சி என்பது திரவிடியன் மாடல், சமூகநீதி ஆட்சி என முதலமைச்சர் மேடைதோறும் முழங்கி வருகிறார். ஆனால் இதற்கிடையில் திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. ஜாதிய வன்மத்தை உமிழும் வகையில் உள்ளது, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்து வருகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு நீதிபதி பதவி என்பது திமுக போட்ட பிச்சை என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதேபோல் சமீபத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி தமிழகத்தில் சமூக நீதி ஆட்சியை திரவிடியன் மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரு காலத்தில் செருப்பை தலையில் தூக்கி சுமந்த சமூகத்தினரை வணக்கத்திற்குரிய மேயர் ஆக்கியிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு என பேசினார். அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சென்னை மாநகர மேயராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐ லியோனியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தனது ஆட்சியை புகழ்வதற்காக ஒரு சமூகத்தை இப்படி இழிவு படுத்துவதா பாஜக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர். சாதிய வன்மம், ஆணவத்தின் வெளிப்பாடு இது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோனியின் பேச்சை கண்டித்தார்.
பாஜக அதிமுக தலைவர்களும் லியோனி பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மாத இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். செருப்பை தலையில் தூக்கி சுமந்தவர்களை வணக்கத்துக்குரிய மேயராக்கி இருக்கிறோம் என பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியிருக்கிறாரே அதை எப்படி பார்க்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன், அவரது பேச்சை நான் முழுமையாக கேட்டேன், அதாவது காலம் காலமாக இப்படி ஒரு சமூகம் இருந்தது, அது இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. அப்படித்தான் இந்த சமூகத்திலிருந்து ஒரு பெண் மேயராகி இருக்கிறார் என்று லியோனி சொல்ல வருகிறார்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பேசவில்லை, இது தலித் சமூகத்தை மட்டுமல்ல கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் பற்றி அவர் பேசிக்கொண்டு வருகையில் ஒரு காலத்தில் தலையில் செருப்பை சுமந்த சமூகம் என்று குறிப்பிடுகிறார், ஆனால் அதை மட்டும் வெட்டி சமூகவலைதளத்தில் பரப்புகிறார்கள். லியோனி ஒரு பெரியாரிஸ்ட் ஒரு சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் பேசியிருக்க மாட்டார் இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.