
துணை வேந்தர் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்கள் லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ், இது தொடர்பான விசாரணையில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆதாரம் இருந்தால் அமைச்சர்களாக இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இணை பேராசிரியர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த கணபதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், துணை வேந்தர் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், துணை சேந்தர் பதவிக்கு அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வந்த செய்தி உண்மையில்லை என தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாவும், அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால், அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்டி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற சட்டப்பூர்வ நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.