
தருமபுரி
காவிரி நீரை திறக்க கர்நாடக முதல் மந்திரியை தமிழக முதலமைச்சர் சந்திக்கும் முயற்சி எந்த பலனையும் தராது. உடனே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ரூ.30 இலட்சம் இலஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் 21 பல்கலைக்கழகங்களும், மருத்துவம், சட்டத்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனம், கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே பா.ம.க. சார்பில் ஆளுநரைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடந்துள்ள ஊழல்கள் குறித்து தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளோம்.
துணைவேந்தர் நியமனத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. தகுதியில்லாத நபர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தலைமைக்கு ரூ.30 கோடி வேண்டுமென்று வசூல் நடந்துள்ளது. அவ்வாறு பணம் கொடுத்தவர்கள், பல்கலைக்கழகங்களில் முதலில் தான் கொடுத்த பணத்திற்கு லாபத்துடன் சம்பாதிக்கதான் நினைப்பார்களே தவிர பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பாடுபட மாட்டார்கள்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்.
மேட்டூர் அணையில் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கர்நாடக மாநிலத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில முதலமந்திரியை நேரில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கர்நாடகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறம் நேரத்தில் இந்த சந்திப்பு எந்த பலனையும் தராது.
உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தண்ணீரை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
தண்ணீரை பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நமது மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றம் நடக்க விடாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எண்ணெகோல் புதூரில் இருந்து தென்பெண்ணையாற்று தண்ணீரை கால்வாய் மூலம் தும்பல அள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை உடனே நிறைவேற்றாவிட்டால் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிதியின் கீழ் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இந்த கட்டிடங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நானே நேரில் சென்று இந்த கட்டிடங்களை திறந்து வைப்பேன்.
இது தொடர்பாகவும், மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலக தொலைபேசி, அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.