உதிரும் அடுக்குமாடிக் குடியிருப்பு.. ரூ.1.5 லட்சம் கேட்கும் தமிழக அரசு.. ஆய்வு செய்து திருமா வைத்த கோரிக்கை.!

By Asianet TamilFirst Published Aug 23, 2021, 9:45 PM IST
Highlights

சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

சென்னை புளியந்தோப்பில் கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. சுவர்களைத் தொட்டால் உதிருவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பை விசிக தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மக்களையும் சந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து ஃபேஸ்புக்கில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
அதில், “கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று பார்வையிட்டேன். தண்ணீர் வசதி இல்லை, மின் தூக்கி இல்லை, அதிகாரிகள் 1.5 லட்சம் பணம் செலுத்த கூறுகிறார்கள் என மக்கள் பல்வேறு குறைகளை கூறினார்கள். அதிகாரிகளிடம் பேசினேன். "கட்டிடம் உறுதியாகத்தான் இருக்கிறது, மேலே பூசியிருக்கும் எம்சேண்ட் சரியில்லாததால் உதிர்கிறது. அதனை உடனடியாக சீரமைக்கிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 4 நாட்களில் தண்ணீர் வசதி மற்றும் மின் தூக்கி அமைக்கப்படும்" எனக் கூறினார்கள்.
400 சதுரடி உள்ள ஒரு வீட்டுக்கு ரூ.13 லட்சம் செலவாகிறது. ஒன்றிய அரசு ரூ. 1.5 லட்சமும் மாநில அரசு ரூ. 6 லட்சமும் வழங்கியிருக்கிறது. தற்போது மாநில அரசு மேலும் ரூ.4 லட்சம் வழங்கி மொத்தம் ரூ. 10 லட்சம் வழங்கியிருக்கிறது. மீதமுள்ள ரூ. 1.5 லட்சத்தை மக்கள் கட்ட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த ரூ. 1.5லட்சம் கட்டணத்தையும் அரசே செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தண்ணீர் வசதியும் மின் தூக்கியும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.” என திருமாவளவன் தெரிவித்தார். 

click me!