
சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கருணாநிதியின் 60 ஆவது ஆண்டு வைர விழாவை கோலாகலமாகக் கொண்டாட திமுகவினர் தங்களை வேகமாக தயார்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் தனித்தனியாக பணிகளை பிரித்துக் கொடுத்துள்ள செயல் தலைவர் ஸ்டாலின், நிர்வாகிகளின் அவுட்புட்டுகளை மட்டும் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகிறார்.
நேரம் இல்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழண்று கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், எடப்பாடி அரசையும், மத்திய அரசையும் விமர்சிக்கவும், கண்டிக்கவும் தவறியதில்லை. இந்த முறை மதுக்கடை தொடங்கி, காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது வரை...
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுக்கடை விவகாரத்தில் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமைகளுக்கு எதிரானது. மக்கள் எதிர்க்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டில் உள்ளது."
"முதல்வர் கட்டுப்பாட்டிலாவது உள்ளதா?மாலுமியற்ற கப்பல் போல் தமிழக போலீஸ் தரைதட்டி நிற்பதால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. போலீசில் ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. ஒரே அதிகாரியிடம் கூடுதலாக பல பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன."
"ஆளுமை இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் போலீஸ் துறை சீர்குலைந்துள்ளது. பெண்கள் எதிர்க்கும் இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. போலீசில் காலியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி சீரமைக்க வேண்டும்." இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.