லாரிகள் ஸ்டிரைக்கை நடக்க விடாதீர்கள் - மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கும் ஜி.கே.வாசன்...

Asianet News Tamil  
Published : Jun 14, 2018, 07:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
லாரிகள் ஸ்டிரைக்கை நடக்க விடாதீர்கள் - மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கும் ஜி.கே.வாசன்...

சுருக்கம்

lorry Strike should not be happen - GK Vasan warns central and state governments

ஈரோடு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலையை தவிர்க்க, மத்திய - மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 13 இலட்சம் லாரிகள் ஓடாதநிலை ஏற்படும். 

காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலையை தவிர்க்க, மத்திய - மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு உடனடியாக பேசி, அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். 

சுதந்திர நாட்டில் தங்கள் கோரிக்கைகளை போராடி பெற அனைவருக்கும் உரிமை உண்டு. சட்ட ரீதியாக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் போராடி பெறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

அதுபோல, ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதுமாகவும் உள்ளது. 

அதேநேரம் அநீதியான திட்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. வருங்கால சந்ததியினரை பாதிக்கும் திட்டங்களை, பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் திட்டங்களை, சுற்றுப்புற சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வரும்போது அதனால் ஏற்படும் சாதகங்கள் என்ன? உடனடி பாதகங்கள் என்ன? என்பதை பார்த்து மக்கள் விரும்பும் திட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நன்மை பயக்கவில்லை. சட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு வடிவம் கிடைத்து உள்ளது. இந்த ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சில கோட்பாடுகளை கொடுத்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதித்துறைக்கே சவால் விடுவதுபோன்று, இன்னும் ஆணையத்துக்கான உறுப்பினரை நியமிக்கவில்லை. 

இதில் மத்திய - மாநில அரசுகள் வேடிக்கை பார்க்காமல் விரைந்து தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியின் பின்புறம் சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!