பாஜக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்ப்பதா..? கோபத்தில் கொந்தளிக்கும் எல்.முருகன்..!

By Asianet TamilFirst Published Sep 21, 2020, 8:12 AM IST
Highlights

பா.ஜ.க. அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக அறிக்கை விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் அமளிக்கு இடையே நிறைவேறியது. ஏற்கனவே மக்களவையிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களை அதிமுக ஆதரிக்கும் நிலையில், திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில், “‘விவசாய சேவைகள் சட்டம் 2020’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக அகற்றப்படும். இந்த 3 சட்டங்களுமே விவசாய உற்பத்தியை பெருக்கி விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்கும் தீர்வை சொல்கின்றன.


ஆனால் பா.ஜ.க. அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக அறிக்கை விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக்கான தமிழக சிறு விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவும் இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள், இடைத்தரகர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் துணைப்போகிறார்கள் என்பதே உண்மை. தமிழக நலனில் அக்கறை காட்டுவதாக சொல்லிக்கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்வது நலன் பயக்கும்.” என்று அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!