எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து ஒதுக்கி விட்டார்கள்... பாஜக மீது திருமாவளவன் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2021, 4:18 PM IST
Highlights

ல்.முருகனை வெறுமனே அப்புறப்படுத்த முடியாது என்பதால், ஒப்புக்கு அமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள். 

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய திறமையுள்ள முதலமைச்சர், சனாதன சக்திகளின் சதிகளை முறியடிப்பார்” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலினை புகழ்ந்துள்ளார். 

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., “தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்தபோது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான், பா.ஜ.க 4 எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்கிறது.

இதற்காக, எல்.முருகனை பாராட்டியிருக்க வேண்டும். அவர் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தலைவராக நீடிப்பதை பா.ஜ.கவின் தேசிய தலைமையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.கவினரும் விரும்பவில்லை. எல்.முருகனை வெறுமனே அப்புறப்படுத்த முடியாது என்பதால், ஒப்புக்கு அமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள். அவருக்கு, அமைச்சர் பதவியை தந்திருப்பது, அவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல.

எல்.முருகனை தலைவர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களை கவர்வதற்காக, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை புதிய தலைவராக நியமித்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து பா.ஜ.கவினர் காய்நகர்த்தி வருகின்றனர். இதனால்தான், கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய திறமையுள்ள முதலமைச்சர், சனாதன சக்திகளின் சதிகளை முறியடிப்பார்” எனத் தெரிவித்தார்.

click me!