வழக்கமாகவே தண்ணீர் தரமாட்டீங்க... இதில் அணையை வேறு கட்டிவிட்டால்... முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 12, 2021, 4:17 PM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கவும், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கும் காட்டும் வகையிலும் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:  தமிழ்நாடு அரசின் இந்த அவசர அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகளே! உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி உரிமையைக் காப்பாற்றுவதற்காக அனைத்து சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை இன்றைய தினம் கூட்டி இருக்கிறோம். மிக மிக முக்கியமான பிரச்சினை தொடர்பாக நாம் அவசரமாகக் கூடி இருக்கிறோம். நாம் அனைவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - காவிரிப் பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

தமிழ்நாட்டுக்குக் காவிரி என்பது வாழ்வுரிமையாகும். அது எந்தளவு உண்மையோ, அந்த அளவுக்கு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை. இதில் இங்கு கூடியுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடும் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையோடு இருக்கின்றன என்பதை நாம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல - ஒன்றிய அரசுக்கும் உணர்த்தியாக வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம்!

காவிரியின் உரிமைக்காக நாம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் “காவிரி உரிமை மீட்புப் பயணம்" மேற்கொண்டு- இப்போது நம்மிடம் உள்ள காவிரி வரைவுத் திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது அடியேன் என்பதை இங்கு அமர்ந்திருப்பவர்கள் அறிவீர்கள். இவை இதுவரை நடந்தவை. இன்று மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது மேகதாது அணை.

 காவிரியின் குறுக்கே நமது மாநில எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அணையைக் கட்ட, கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதனை நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து தடுத்தாக வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நலன் மோசமான நிலைமையை அடையும். இந்த அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடகம் சொல்லி வருகிறது. இதில் துளியளவும் உண்மை இல்லை. 

தமிழ்நாடு முழுமையாக பாதிக்கப்படும்.  இப்போது அவர்கள் அணை கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது என்ற இடத்துக்கு சிறிது முன்னர் அர்காவதி நதி வந்து காவிரியில் இணைகிறது. இப்படி இணைந்த பிறகு காவிரி நதியானது மேகதாதுவில் கடிமான பாறைப் பகுதியில் குறுகிய  பள்ளம் வழியாக சுமார் 10 மீட்டர் அகலத்தோடு பாய்கிறது. இந்த இடத்தில்தான் அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதனைக் கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீர்வரத்து குறையும். அதனால்தான் கட்டக்கூடாது என்கிறோம். வழக்கமான காலத்திலேயே நமக்குத் தரவேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்குவது இல்லை. இப்படி ஒரு அணையையும் கட்டிவிட்டால், எப்படித் தண்ணீர் வரும் என்பதுதான் நம்முடைய கேள்வி! 

வெள்ளக் காலங்களில் அந்த நீரைத் தேக்கி வைக்காத சூழலில் - உபரி நீரைத்தான் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் தருகிறது. காவிரி நடுவர் மன்ற உத்தரவு - உச்சநீதிமன்ற உத்தரவு – ஆகிய ஒதுக்கீடுகளின்படி சொல்லப்பட்ட நீரையும் கர்நாடகம் வழங்குவது இல்லை. இந்தச் சூழலில், காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட, மேலும் ஒரு அணை கர்நாடக அரசால் அமைக்கப்பட்டால் நமது விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அபாயம், தற்போது நம்மை எதிர்நோக்கியுள்ளது. அதனால்தான் இந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி உள்ளோம். பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவைக்காகவும் மின் உற்பத்திக்காகவும் இந்த அணையைக் கட்டுவதாக கர்நாடகம் சொல்வது உண்மையல்ல. அது நம்மை ஏமாற்றுவதற்காகச் சொல்வது.

 காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் முழு உரிமை கொண்டது. கர்நாடகாவைவிட தமிழ்நாட்டில்தான் அதிகமான நீளத்துக்குக் காவிரி பாய்கிறது. எனவே முழு உரிமை நமக்கு இருக்கிறது. இந்த உரிமையை சட்டபூர்வமாகவும் நாம் நிலைநாட்டி உள்ளோம். புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு 17.6.2021 அன்று பிரதமர் அவர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை நான் அளித்தேன். அப்போது, அவற்றில் முக்கியப் பிரச்சினையாக மேகதாது அணை குறித்து விளக்கி, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தைக் கைவிட அறிவுறுத்தும்படி, பிரதமரைக் கேட்டுக்கொண்டேன்.

இதைத் தொடர்ந்து,  கர்நாடக முதலமைச்சர் அவர்கள் 3.7.2021 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது திட்டம், பெங்களூரு பெருநகரத்தின் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும்தான் எனவும், தமிழ்நாட்டின் பவானி ஆற்றில் துணைப்படுகையில் உள்ள குந்தா மற்றும் சில்ஹல்லா நீர்மின் திட்டங்களை மேற்கோள் காட்டி, மேகதாது திட்டத்தைப் பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், இதுகுறித்த ஐயங்களைப் போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதற்கு பதிலாக, 04.07.2021 அன்று, நான் அனுப்பிய கடிதத்தில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினியின்கீழ் உள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியில் வரும் தண்ணீருக்கு, மேகதாது திட்டம் தடையாக இருக்கும் என்றும், அது தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, இத்திட்டத்தைத் தமிழ்நாடு எக்காலத்திலும் ஏற்க இயலாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்.

இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், 06.07.2021 அன்று மாண்புமிகு ஒன்றிய 'ஜல் சக்தி அமைச்சர்' அவர்களைச் சந்தித்து, மேகதாது திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு கோரினார்.  மத்திய ஜல் சக்தி அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைக் கலந்தாலோசிக்காமல், கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காது என்று அப்பொழுது உறுதியளித்தார்.

இந்தச் சூழலில், இந்த அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானங்களை இக்கூட்டத்திலே ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களை அனைத்துக் கட்சிக் குழுவாகச் சென்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் அவர்களிடம் அளித்திட வேண்டும் என்றும் கோருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்த தங்களது மேலான கருத்துக்களை சுருக்கமாக எடுத்துரைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

click me!