
திமுக மீது திட்டமிட்டு 2 ஜி வழக்கு புனையப்பட்டதாகவும், அக்கட்சியை அழிக்க நினைத்த சதி தற்போது முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேல் திமுகவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த 2ஜி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் இதனை கொண்டாடிவருகின்றனர்.
தீர்ப்பு வெளியானதும் கோபாலபுர இல்லத்தில் உள்ள கருணாநிதியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பின்போது பொதுச் செயலாளர் அன்பழகனும் உடன் இருந்தார்.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேற்று இரவு கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவும் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, திமுக மீது திட்டமிட்டு 2 ஜி வழக்கு புனையப்பட்டதாகவும், அக்கட்சியை அழிக்க நினைத்த சதி தற்போது முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய வைரமுத்து, ‘இந்த தீர்ப்பு திராவிட இயக்கத்தின் மீதான வசையைக் களைந்துள்ளது. தீர்ப்பு ஒரு புதிய வழியைக் காட்டும். ஸ்டாலின் இனி இயக்கத்தை விரிவு படுத்தவேண்டும் என பேசினார்.