கூவத்தூர் ரகசியம் நிச்சயம் வெளியாகும்! எடப்பாடியை டென்சனாக்கும் கருணாஸ்!

By vinoth kumarFirst Published Oct 27, 2018, 10:53 AM IST
Highlights

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் தொடர்ந்து எடப்பாடி அரசை எதிர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கருணாஸ் தான் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் ரகசியத்தை நிச்சயம் ஒரு நாள் வெளியிடுவேன் என்று திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று முதல் மூன்று நாட்களுக்கு ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை நடைபெற உள்ளது. இந்த விழாக்களில் ஆண்டு தோறும் கருணாஸ் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் ஜாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

இதே போல் ஐ.பி.எல் போட்டிகளின் போது ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கிலும் கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன் உள்ளது.இந்த வழக்குகளுக்காக கருணாஸ் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையங்களில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார். தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் மட்டும் காவல்நிலையங்களில் கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு கோரி கருணாஸ் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் மூன்று நாட்கள் மட்டும் கருணாஸ்க்கு விலக்கு அளித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசினார். அப்போது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் தொடர்ந்து எடப்பாடி அரசை எதிர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கருணாஸ் தான் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும் சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதிலும் உறுதியாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். அப்போது கூவத்தூர் விவகாரம் குறித்து கருணாசிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கருணாஸ், கூவத்தூரில் என்ன நடந்தது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார். நிச்சயமாக கூவத்தூர் ரகசியத்தை ஒரு நாள் வெளியிடுவது உறுதி என்றும் கருணாஸ் கூறினார். தேர்தல் சமயத்தில் வெளியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, தேர்தல் ஆதாயத்திற்காக கூவத்தூர் ரகசியத்தை பயன்படுத்தமாட்டேன் என்று கருணாஸ் பதில் அளித்துள்ளார்.

click me!