20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை..! தாறுமாறாக விமர்சித்த குமாரசாமி..!

By Manikandan S R SFirst Published May 20, 2020, 1:20 PM IST
Highlights

கொரோனா வைரஸால் எழுந்திருக்கும் நெருக்கடியை சமாளிக்க சிறுதொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் அறிவிக்கவில்லை. தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நீண்டநாட்களுக்கு பொய் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய அரசின் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் நிலையில் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 50 நாட்களுக்கு மேலாக அமலில் இருக்கும் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனை சீர்செய்யும் வகையில் மத்திய அரசு கொரோனா சிறப்பு நிதித் தொகுப்பாக 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை அறிவித்திருக்கிறது. பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஏழைகளுக்கு உதவாது என விமர்சித்து வருகின்றன.

அந்த வகையில் மதசார்பற்ற ஜனதாள கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை என விமர்சித்துள்ளார். பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவால் அனைத்து மாநிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று 15வது நிதி கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பில் மாநிலங்களுக்கு எந்த நிதி உதவியும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிதி தொகுப்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. 40 கோடி மக்கள் நாட்டில் வறுமையில் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு அம்மக்களுக்கு உதவாது. தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் என கூறியிருக்கிறது. இதற்காக மத்திய அரசிற்கு 2,500 கோடி மட்டுமே செலவாகும்.

கொரோனா வைரஸால் எழுந்திருக்கும் நெருக்கடியை சமாளிக்க சிறுதொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் அறிவிக்கவில்லை. தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நீண்டநாட்களுக்கு பொய் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய அரசின் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை. முட்டாள்தனமான அறிவிப்புகள். மக்களை திசை திருப்பவே இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. பொய்யான அறிவிப்புகளை கைவிட்டு தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வை அறிவிக்க வேண்டும். ஏழைகளின் வயிற்றை நிரப்பும் திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.

click me!