
காவல்துறை விஷயங்களில் நானோ, எனது அமைச்சர்களோ தலையிட மாட்டோம், உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு… ஆனால் எந்தத் தப்பும் நடக்ககூடாது என கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.
குமாரசாமி கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் துறையின் செயல்பாட்டில் நான் அரசியல் ரீதியாக தலையிட மாட்டேன். கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் எந்தவிதமான சட்டவிரோத செயல்களையும் நான் சகித்துக்கொள்ள மாட்டேன் என்றார்.
இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். நீங்கள் அரசியல் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
காவிரி பிரச்சனை உள்ளிட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், நேர்மையாகவும், துணிச்சலுடனும் நடந்து கொள்ள வேண்டும் என குமாரசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். ஆண்டுகள் தொடர்ந்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இந்த அரசு சிறப்பாக இயங்க போலீஸ் துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குமாரசாமி கேட்டுக் கொண்டார்.