கூடங்குளம் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி...!! ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வீடு, கடைகள் கட்ட தடை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2020, 11:51 AM IST
Highlights

இனிமேல் அணுவுலையில் இருந்து 5 கி.மீக்குள் வீடுகள் அல்லது கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ்   வாங்குவது தொடர்பாக நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 

கூடங்குளம் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பான அறிவிப்பாணையை திரும்பப்பெற கோருகிறோம். கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில், இடிந்தகரையில் உள்ள போராடும் மக்கள் தெளிவாக சில விசயங்களை எடுத்து வைத்தார்கள். அதில் ஒவ்வொன்றாக இப்போது நடைபெற ஆரம்பித்துள்ளது. அணுவுலை திட்டங்களை அனுமதித்தால் சில வருடங்களில் நாம் இந்த பகுதியில் உள்ள ஊர்களை காலி செய்ய நேரிடும் என்றனர்.  அப்போது அரசும் அதிகார வர்க்கமும் அதை மறுத்தது. இதோ முதல் கட்ட அறிவிப்பு வந்துவிட்டது. இனிமேல் அணுவுலையில் இருந்து 5 கி.மீக்குள் வீடுகள் அல்லது கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ்   வாங்குவது தொடர்பாக நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. 

ராதாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இது நடைபெறுகிறது. இன்று வீடு கட்டுவதற்கு தேசிய அணுமின் கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும் என்று ஆரம்பிக்கும் நடைமுறை நாளை எங்கு சென்று முடியும் என்று எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை கொண்டுவருவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்றுவதுதான் நோக்கம். அணுவுலைகளை சுற்றி குறிப்பிட்ட மக்கள்தொகை தான் இருக்கவேண்டுமென்ற விதிமுறைகள் உள்ளன, அந்த விதிமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்படும். வீடுகள் கட்ட உள்ளூர் ஊராட்சி அல்லது நகர நிர்வாகத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டுமென்பது நடைமுறை அதைவிடுத்து அணுசக்தி துறையிடம் அனுமதி வாங்க கோருவது எந்த விதத்தில் நியாயம்?.

 

மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரானது. போராட்டம் நடைபெற்ற சமயத்தில் போராடும் மக்களை சந்தித்த முதல்வர் முக்கியமான உறுதி ஒன்றை அளித்திருந்தார். அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த விதமான சின்ன அசௌகரியம் கூட ஏற்படாது, வழக்கம் போல் வீடுகள் கட்டி, விவசாயம் செய்து, மீன் பிடித்து, கடைகள் நடத்தலாம் என்று உறுதி அளித்திருந்தார். இன்றைக்கு அவர் பெயரால் நடைபெறும் அரசு அவர்கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிப்பது மறைந்த தலைவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.  இந்த அறிவிப்பாணையை திரும்பப்பெற தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது 

 

 

click me!