சும்மா இருந்த போலீசை வெறி ஏத்திட்டியே கேடிஆர்.. போலீஸ்னா என்னணு பாக்க போற..!! பயங்காட்டும் சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2022, 4:19 PM IST
Highlights

20 நாட்களாக காவல்துறை எத்தனை தனிப்படைகளை அமைத்து எங்கெங்கெல்லாம்  தேடி இருப்பார்கள் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். தனிப்படை அமைத்து விட்டார்கள் என்பது மட்டும்தான் நமக்கு செய்தியாக கிடைக்கும், ஆனால் அந்த தனிப்படை என்னமாதிரியான சிரமங்களை அனுபவிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.  

தன் மீதான குற்றச்சாட்டுக்கு ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளியாமல் இருந்திருந்தால், காவல்துறை ஓரளவுக்கு மென்மையாக நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஓடி ஒளிந்து ஆட்டம் காட்டியதால் அவர் மீது  நிலுவையில்  உள்ள வழக்குகள் ஒவ்வொன்றிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என சவுக்கு சங்கர் எச்சரித்துள்ளார். காவல்துறை கடந்த 20 நாட்களாக பட்ட அவமானம், அலைச்சலுக்கு ராஜேந்திர பாலாஜிக்கு நிச்சயம் பரிகாரம் கிடைக்கப் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆவின் மற்றும் பல அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் 3 கோடி ரூபாய்க்கு அதிகமாக மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதி மன்றங்கள் ரத்து செய்தன. இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் அவர் தப்பி தலைமறைவானார். கேரளாவில் பதுங்கிவிட்டார், கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளார். அவர் மும்பை சென்று அங்கிருந்து டெல்லிக்கு போய் அங்கு பதுங்கி விட்டார் என்றெல்லாம் தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரை பிடிக்க 8 க்கும்  அதிகமான தனிப்படைகளை அமைத்து விருதுநகர் போலீசார் தேடி வந்தனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போலீசார் கையில் சிக்காமல் அவர் தண்ணி காட்டி வந்தார். ஆனால் கண்ணில் விளக்கெண்ணை விட்டு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் திருச்சி, கோவை, கேரளா, டெல்லி என பல இடங்களில் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் அசனில் காரில் தப்பிக்கும் போது அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அவர் கைது செய்யப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீசார் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆர்ப்பாட்ட மேடையிலிருந்தபோதே அவரை சுற்றிவளைத்து கைது செய்ய தவறிய போலீஸ், அவர் தலைமறைவாகி விட்ட பிறகு அவரை தேடி வருகிறது. ஒரு சாதாரண மாஜி அமைச்சரைகூட கைது செய்ய முடியாத இந்த காவல்துறை எப்படி கொலை. கொள்ளை, கிரிமினல் குற்றவாளிகளை பிடிக்க போகிறது? ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான கூறிக்கொள்ளும் தமிழக போலீஸின் திறமை இவ்வளவுதானா? என்றெல்லாம் பலரும் வசித்துவந்தனர்.

அதேபோல் போலீசார் பழைய டெக்னிக் முறைகளிலேயே இன்னும் இருக்கிறார்கள். ரியல் போலீஸ் வேலையை காவல்துறையும் மறந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்பட்டு வந்தது.  இத்தனை விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ராஜேந்திர பாலாஜி பிடிபட்டுள்ளார்.  இந்நிலையில் அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போதுதான் விருதுநகர் போலீசார் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். ஒரு முன்னாள் அமைச்சர் இப்படி பொறுப்பற்ற முறையில் ஓடி ஒளிந்தது சரியல்ல, இந்த வழக்கை கூட எதிர் கொள்ள முடியாதவர் எப்படி உண்மையானவராக இருக்க  முடியும், மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் இப்படி ஓடி ஒளிவது அநாகரீகமானது என பலரும் ராஜேந்திரபாலாஜியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் ராஜேந்திர பாலாஜி பிடிபட்டுள்ள நிலையில் காவல்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், 20 நாட்களாக தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய ராஜேந்திரபாலாஜி இனிமேல் தான் போலீஸின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளப் போகிறார் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-  தம் மீதான வழக்கில் காவல்துறை தேடுகிறது என்பது தெரிந்தவுடன் நேரில் ஆஜராகி காவல்துறைக்கு ராஜேந்திர பாலாஜி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அரசும் சரி, காவல்துறையும் சரி இந்த அளவுக்கு கோபமடைந்து இருக்க மாட்டார்கள்.  20 நாட்களாக ஆட்டம் காட்டிய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுருக்கிறார். ஆனால் இந்த 20 நாட்களாக காவல்துறை எத்தனை தனிப்படைகளை அமைத்து எங்கெங்கெல்லாம்  தேடி இருப்பார்கள் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். தனிப்படை அமைத்து விட்டார்கள் என்பது மட்டும்தான் நமக்கு செய்தியாக கிடைக்கும், ஆனால் அந்த தனிப்படை என்னமாதிரியான சிரமங்களை அனுபவிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.  ஒரு ஆய்வாளர் உடன் இரண்டு கான்ஸ்டபிள்களை சேர்த்துவிட்டு, உடனே டெல்லிக்கு போங்கள் என்று சொல்லிவிடுவார்கள். கையில் போதிய அளவிற்கு பணமும் இருக்காது.  

ஆனாலும் ஏதாவது ஒரு வழியில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் போலீசார் சந்திக்கும் நிலைமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, எனக்கு தெரிந்து ஒரு பெண் ஆய்வாளர் சாலை மார்க்கமாகவே வெறும் ஜீப்பை எடுத்துக்கொண்டு மேற்கு வங்கம் வரை சென்ற கதைகள் எல்லாம் உண்டு. ஆனால் வெளியில் பார்க்கும்போது தனிப்படை சென்றிருக்கிறது என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். உள்ளே அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் நமக்கு தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு நபர் அவர்களுக்கு தண்ணீர் காட்டும்போது காவல்துறை அதிகாரிகளுக்கு  கோபம் வருமா? வராதா? நிச்சயம் வரும். அதற்காக பொய் வழக்கில் இவரை சிக்க வைப்பார்கள் என்று நான் கூறவில்லை, ராஜேந்திர பாலாஜி அவர்கள் மீது மேலும் புகார்கள் வந்தால் அதன் மீது உடனே வழக்குகள் பதிவு செய்வார்கள். ஏற்கனவே இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும், இதுவரை சொத்து குவிப்பு வழக்குகளில் யாரையும் கைது செய்வது இல்லை. ஆனால் நிச்சயம் ராஜேந்திரபாலாஜி அதிலும் கைது செய்யப்படுவார். இவ்வாறு சவுக்கு சங்கர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 
 

click me!