பா.ஜ.க.வை வளர்க்க அரைவேக்காட்டுத்தனமாக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை பேசுகிறார்- விளாசும் கே.எஸ்.அழகிரி

By Ajmal Khan  |  First Published Jun 2, 2023, 3:02 PM IST

கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள். ஆனால், தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.


மேகதாது அணை-எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கருத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பதிலடி கொடுத்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக காங்கிரசை சீண்டிப் பார்க்கிறார். தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பாரதிய ஜனதா தடுத்து நிறுத்தும் என வீராவேசமாக பேசியிருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம் காட்டினார்கள்.

Tap to resize

Latest Videos

இரட்டை வேடம்  போடும் பாஜக

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விரைவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் ஜூன் 2017 இல் அனுமதி அளித்தது. நவம்பர் 22, 2018 இல் கர்நாடக அரசு தயாரித்த திட்ட அறிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, 2019 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ? இதைவிட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ?

அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார் ?

கடந்த 2021 முதல் 2023 வரை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சிக் காலத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பா.ஜ.க. அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார் ? இதை எதிர்த்து குரல் எழுப்பினாரா ? இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன் என்று சொல்கிற அண்ணாமலை அன்று வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, இப்போது வீரவசனம் பேசுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். நமது உரிமையின்படி, நாம் பெற வேண்டிய தண்ணீரை தடுக்கிற வகையில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே தமிழக எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் பிலி குண்டுலு நீர் அளவை நிலையத்திற்கு மேலே அணை கட்டப்படுமேயானால், 

கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும்

தமிழகத்தின் நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே வருகிற நீர் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டியதாகும். அந்த நீரை தடுத்து, தேக்கி வைத்து பயன்படுத்துவது தான் மேகதாது அணை கட்டுவதன் நோக்கமாகும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது. தற்போது கர்நாடக அரசு அணை கட்ட எடுக்கிற முயற்சிகள் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும். கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள். ஆனால், தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும்.  தமிழக காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பா.ஜ.க.வை விமர்சிப்பாரா ? ஆனால்

அண்ணாமலையின் எண்ணம் பகல் கனவாகத் தான் முடியும்

தமிழக காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் திண்டாடி திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடக வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழக பா.ஜ.க.வை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் எண்ணம் பகல் கனவாகத் தான் முடியும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த முடியாது.! பாஜக மூத்த நிர்வாகிகளை அலறவிடும் அண்ணாமலை

click me!