மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தை தான் எதிர்பார்க்க முடியும்..! சீமானை விமர்சிக்கும் கே.எஸ் .அழகிரி

By Ajmal KhanFirst Published Feb 6, 2023, 8:16 AM IST
Highlights

கருணாநிதிக்கான பேனா நினைவு சின்னம் அமைக்கப்படவுள்ள இடத்தில்,  ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு நினைவு சின்னம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. பேனா நினைவு சின்னத்திற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டால் உடைப்பேன் என தெரிவித்து இருந்தார். இதற்க்கு திமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

உள்நோக்கத்தோடு கருத்து

இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதை உள்நோக்கத்தோடு எதிர்த்து கருத்துகள் கூறப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை... கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

கடலில் ரயில் பாதை

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது. வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரி முனையில் திருவுருவச் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல.இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவிற்கு கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள் ? அதேபோல, உலக நாடுகளில் பார்த்தால் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களும் சுரங்கப்பாதைகளும் பல கீ.மீ. ஆழத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன. 

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்

தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசினால் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு மக்களின் பேராதரவு பெற்று வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்வதாக கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்.! திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்.? இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் எத்தனை பேர் தெரியுமா??

click me!