பட்டியல் இனத்திலிருந்து விலக்களிக்க கோரும் கிருஷ்ணசாமி பொதுச் தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே !! வெளுத்து வாங்கிய அமமுக வேட்பாளர் !!

By Selvanayagam PFirst Published Mar 28, 2019, 10:25 PM IST
Highlights

ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று கோரும் கிருஷ்ணசாமி பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே என தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் விளாசித் தள்ளியுள்ளார்..

தென்காசி (தனி) தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இதில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் களமிறக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதியில் 9 ஆண்டு கால வெற்றி வரலாறு இருந்தாலும்கூட தொகுதியை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது திமுக. கிருஷ்ணசாமிக்கு சாதி வாக்குகள் இருந்தாலும்கூட ஒருமுறை அதிமுக, ஒருமுறை திமுக என்று அவர் கூட்டணி தாவிக் கொண்டே இருப்பதும் அவரது பாஜக ஆதரவு நிலைப்பாடும் தொகுதிக்குள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் அதிமுக வாக்குகளை கனிசமான அளவில் பிரிப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னுத்தாய், இந்தத் தேர்தல் கிருஷ்ணசாமியின் தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  டிடிவி தினகரனின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு தென்காசி மக்கள் பேராதரவு தெரிவிக்கின்றனர். செல்லுமிடமெல்லாம் டிடிவி தினகரனுக்கு ஆதரவு குவிகிறது. நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துள்ளோம். அதனால் இது வெற்றிக் கூட்டணி என்றார்.

தென்காசி தொகுதி பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதி. கிருஷ்ணசாமியின் கொள்கை என்ன? ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்பது. பட்டியல் இனத்துக்கு எதிராக இருப்பவர் தனித் தொகுதியில் நிற்காமல் பொதுத் தொகுதியில்தானே நின்றிருக்க வேண்டியது தானே என காட்டமாக விமர்சனம் செய்தார்.

கிருஷ்ணசாமியின்  அரசியல் என்ன மாதிரியானது என்பதை பொது மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவரது தேர்தல் அரசியலுக்கு விரைவில் தென்காசியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆளுங்கட்சியின் ஆதரவு இருந்தாலும்கூட மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் கிருஷ்ணசாமியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என பொன்னுத்தாள் தெரிவித்தார்.

click me!