கிருஷ்ணகிரியில் திமுக கோஷ்டி மோதல்... பிண்ணனி தகவல்கள் இதோ! தலையிடுமா தலைமை?

By vinoth kumarFirst Published Sep 7, 2018, 1:37 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தி.மு.க.விற்கு திரும்பியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சராகவும் தி.மு.கவின் தருமபுரி மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முல்லை வேந்தன்.

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தி.மு.க.விற்கு திரும்பியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சராகவும் தி.மு.கவின் தருமபுரி மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முல்லை வேந்தன். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் தி.மு.க வேட்பாளருக்கு எதிராகவே வேலை பார்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து முல்லைவேந்தன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தே.மு.தி.கவில் முல்லைவேந்தன் இணைந்தார். 

ஆனால் தே.மு.தி.கவில் முல்லை வேந்தனுக்கு எதிர்பார்த்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும் தே.மு.தி.க தலைமையின் செயல்பாடுகளையும் முல்லைவேந்தனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தே.மு.தி.கவில் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில் தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தருமபுரி மாவட்ட தி.மு.க செயலாளர் தடங்கம் சுப்ரமணி முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை நேரில் சென்று சந்தித்தார். மேலும் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க தடங்கம் சுப்ரமணி ஏற்பாடு செய்தார். ஏற்கனவே தருமபுரியில் தடங்கம் சுப்ரமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்தே தி.மு.கவில் இருந்து முல்லை வேந்தன் நீக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவர் மூலமாகவே தி.மு.கவில் முல்லை வேந்தனை ஸ்டாலின் இணைத்துக் கொண்டார். மேலும் இந்த முறை தருமபுரிக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசியலில் தீவிரம் காட்டுமாறு முல்லைவேந்தனுக்கு தி.மு.க மேலிடம் அறிவுறுத்தல் வழங்கியது. இதனை தொடர்ந்து கட்சியில் மீண்டும் இணைந்த பிறகு கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க தொடர்பான நிகழ்ச்சிகளில் முல்லைவேந்தன் தலைகாட்ட ஆரம்பித்தார். மேலும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் முல்லைவேந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் தி.மு.க மேலிடம் அம்மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்த தி.மு.க வர்த்தகர் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட துணைச் செயலாளர் துரை இல்லத் திருமணவிழாவிற்கு முல்லைவேந்தன் அழைக்கப்பட்டிருந்தார்.

விழா மேடையில் இருந்த முல்லைவேந்தனுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ முருகன் மற்றும் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் நவாப் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான செங்குட்டுவனுக்கு மட்டும் முல்லைவேந்தன் மீண்டும் திமுகவிற்கு திரும்பியதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனது ஆதரவாளர்கள் முல்லைவேந்தனை சந்திக்கவும், அவருக்கு திருமண நிகழ்ச்சியில் சால்வை அணிவிக்கவும் செங்குட்டுவன் தடை போட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் மீறி செங்குட்டுவனால் பொறுப்புக்கு வந்த கிருஷ்ணகிரி நகர வர்த்தக அணிச் செயலாளர் சமீயுல்லா உள்ளிட்ட சிலர் முல்லைவேந்தனுக்கு மரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க நிர்வாகி சமீயுல்லாவை கிருஷ்ணகிரியில் வைத்து சக தி.மு.கவினரே அரிவாளால் வெட்டியுள்ளனர்.

 மேலும் மாவட்டச் செயலாளர்  செங்குட்டுவனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறாயா? என்று கேட்டுக் கொண்ட சமீயுல்லாவை தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயம் அடைந்த சமீயுல்லாவுக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், செங்குட்டுவன் ஆதரவாளர்கள் அஸ்லம், அப்பு, வெங்கடேசன், பப்லு ஆகிய தி.மு.கவினரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செங்குட்டுவன் மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செங்குட்டுவனை மாற்றிவிட்டு முல்லைவேந்தனுக்கு அந்த பதவி கொடுக்கப்படலாம் என்கிற ஒரு பேச்சு தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. இதன் காரணமாகவே தி.மு.க நிர்வாகிகள் முல்லைவேந்தனை ஆர்வத்துடன் சந்தித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் தான் முல்லைவேந்தனை சந்தித்த தி.மு.க நிர்வாகிகளுக்கு அரிவாள் வெட்டு விழும் அளவிற்கு சென்றுள்ளது.

click me!