கே.பி பார்க் குடியிருப்பு தரம் குறித்து 441 பக்க அறிக்கை தாக்கல்... பீதியில் ஓபிஎஸ்.. கதிகலங்கும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 4:09 PM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்த  கட்டிடத்தின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

புளியந்தோப்பு கேபி பார்க்  குடியிருப்பு கட்டிடத்தில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது என தமிழ்நாடு வாழ்விடம் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். வல்லுநர் குழு கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில்  தவறு நடந்திருக்கும் பட்சத்தில் கட்டிடம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால், 112 கோடி மதிப்பில் 864 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால் அந்த குடியிருப்பு கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு தொட்டாலே உதிரும் நிலையில் இருந்ததால், அந்தக் கட்டிடத்தில் குடியேறிய மக்கள் அது குறித்து புகார் எழுப்பியதுடன், கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இந்த விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்தது, இதன்காரணமாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது, கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு குறித்த முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்த நிலையில், நகர்புற  வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் இடம் கே.பி பார்க் குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி அறிக்கையை ஐஐடி வல்லுநர் குழு இன்று தாக்கல் செய்தது. அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு சுமார் 441 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் கோவிந்த ராவ், ஐஐடி வல்லுநர்கள் கொடுத்துள்ள 441  பக்க அறிக்கை முழுவதையும் படித்த பின்னரே இது குறித்து விரிவாகக் கூற முடியும் என்றார்.

மொத்தத்தில் அந்த ஆய்வின் அடிப்படையில் கே.பி பார் கட்டிடத்தில் சில இடங்களில் மறுசீரமைப்பு தேவையாக உள்ளது, உடனடியாக அந்த பணிகள் தொடங்கும், குறிப்பாக  பிளாஸ்டரிங் (பூச்சு) பெரிய பிரச்சினையாக உள்ளது, ஆய்வறிக்கையை முழுவதுமாக படித்து பின் அதில் தவறுகள் இருந்தால், கே.பி பார் கட்டிடம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்தார். 

இந்த கட்டிடம் கட்டி முடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்த  கட்டிடத்தின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 

click me!