
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல் நடைபெற்றால் டி.டி.வி.தினகரன் காணாமல் போவார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ்சின் இல்லத்தில் அந்த அணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கே.பி.முனுசாமி, ஆர்,கே.நகரில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் மதுசூதனன் தான் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் இப்போது உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி வருகிறார், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தினகரனை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என ஜெ கூறியதாக சித்தி சசிகலா சொன்னதாக தினகரன் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பட்டுவாடா செய்யப்பட்ட 89 கோடி ரூபாய் பணம் யாருடையது? தினகரனுடையதா ? எடப்பாடி பழனிசாமிக்குரியதா ? அல்லது அமைச்சர் விஜய பாஸ்கருடையதா? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
தினகரன் என்ற தனிமனிதனுக்காக இன்று 7 அமைச்சர்கள் குற்றவாளிக்கூண்டில் உள்ளதாக தெரிவித்தார்.
விஜயபாஸ்கரிடம் கைப்பற்றப்பற்ற ஆவணங்களில் அப்பல்லோ மருத்துவர் பாலாஜிக்கு 5 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த பணத்தை தான் பெற்றுக் கொண்டது உண்மைதான் என டாக்டர் பாலாஜியும் ஒத்துக் கொண்டுள்ளார்.
அப்படி என்றால் அந்த ஆவணங்களில் உள்ள மற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைதானே என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.