
ஆறுக்குட்டி எம்எல்ஏ தனது சொந்த தேவைக்காகத்தான் எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார் என்றும் மக்களின் மனசாட்சியை பன்னீர்செல்வம் அணியிடம் விட்டு விட்டு தனி மனிதனாக ஆறுக்குட்டி சென்றுள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ம் அணியில் இருந்து வெளியேறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று அணிமாறியது ஓ.பி.எஸ். தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பி.எஸ். அணிக்கு முதல் முதலில் ஆதரவு தெரிவித்து வந்ததும், முதல் முதலில் வெளியேறியதும் ஆறுக்குட்டி தான். அவரது விலகல் பற்றி கருத்து தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், அவராக வந்தார், சென்றார் என்று கூறினார்.
ஆறுக்குட்டி வெளியேறியதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அணியின் அவசர ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக எழுந்து காரில் எங்கோ சென்றார்.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆறுக்குட்டி எம்எல்ஏ தேவைக்காக எடப்பாடி அணிக்கு சென்று உள்ளார். மக்களின் மனசாட்சியை பன்னீர்செல்வம் அணியிடம் விட்டு விட்டு தனி மனிதனாக ஆறுக்குட்டி சென்று உள்ளார். சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது தமிழகத்திற்கே தலைகுனிவு என்றார்.