பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடியதாக கோவன் கைது!!

First Published Apr 13, 2018, 4:18 PM IST
Highlights
kovan has been arrested by trichy police


பிரதமர் மற்றும் முதல்வரை விமர்சித்து பாடியதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த பாடகர் கோவன், மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர். சமூக சீர்கேடுகள், சாதிய அடக்குமுறைகள், கனிமவள கொள்ளை, அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பாடல்களை எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில், கோவனை திருச்சி கே.கே.நகர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைதிற்கான காரணத்தை உறவினர்கள் கேட்டபோது தெளிவாக பதில் கூற போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

ரதயாத்திரைக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் சமீபத்தில்  பாடல்களைப் பாடினார். பிரதமர் மோடியையும் முதல்வரையும் விமர்சித்துப் பாடல் பாடியதற்காகத்தான் கோவனை  திருச்சி போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த மார்ச் 28ம் தேதி பா.ஜ.க மாநகர் மாவட்ட இளைஞரணி பிரிவுத் தலைவர் கெளதமன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவனுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். 

கடந்த 2015-ம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ”மூடு டாஸ்மாக்கை மூடு” என்று பாடியதற்காகக் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!