‘மேயர்’ தேர்தலில் வெல்வது யார் ? செந்தில் பாலாஜியா ? எஸ்.பி.வேலுமணியா ? - சூடுபிடிக்கும் கோவை தேர்தல் களம்…!

By manimegalai aFirst Published Nov 24, 2021, 2:17 PM IST
Highlights

வரப்போகும் மேயர் தேர்தலில், செந்தில் பாலாஜி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரில்  கோவையில் யார் வெற்றிபெறுவார் என்று தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கோவையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும், என்ன ஆனாலும் விட்டுத்தரக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் போட்டிபோட்டுக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர்.ஆரம்ப காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்தது ‘கோவை’. ஆனால் இப்பொழுதோ மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. எல்லா பகுதிகளிலும் கணிசமான தேர்தல் வெற்றியை ருசித்த திமுகவால், கோவையில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் சரியான மாவட்ட தலைமை இல்லாததே ஆகும்.

முக்கியமாக பொங்கலூர் பழனிசாமிக்கு பிறகு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் திணறிப்போனது கோவை மாவட்ட திமுக. செந்தில் பாலாஜியின் வருகைக்கு பிறகு மீண்டும் கோவை மாவட்ட திமுக புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது.கார்த்திகேய சிவசேனாபதி,மக்கள் நீதி மைய்யத்தில் இருந்து வந்த மகேந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியின் படையில் போர்த்தளபதிகளாக பணியாற்றுகிறார்கள் என்று திமுவினர் தெரிவிக்கின்றனர். முதல்வர் வருகைக்கு பின்னர் செந்தில் பாலாஜி, படு வேகத்தில் தேர்தல் வேலையில் இறங்கி இருக்கிறார்.

அதிமுகவை வெல்வது என்பது கொஞ்சம் கடினம் தான் என்று கடுமையாக உழைத்து வருகின்றனர் கோவை மாவட்ட திமுகவினர்.’மக்கள் சபை’ என்று கோவை மாவட்டம் முழுவதும் பம்பரமாக சுற்றி சுழன்று வருகிறார். கிட்டத்தட்ட எல்லா வார்டுகளுக்கும் கமிட்டி நியமித்து,என்னென்ன எப்பொழுது யார் யாருக்கு செய்ய வேண்டும் என்று முழு பட்டியலை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து இருக்கின்றனர் கோவை திமுகவின் முக்கிய புள்ளிகள்.

திமுகவை அசால்ட்டாக ஜெயித்து விடலாம் என்று எஸ்.பி வேலுமணி அண்ட் கோவினர் நினைத்து கொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். கடந்த ஒரு மாதமாகவே வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றியை தொகுதி முழுவதும் கூறி வருகிறார் எஸ்.பி.வேலுமணி. இன்று வரை அதை செய்து கொண்டு இருக்கிறார்.அதிமுகவினரிடம் விசாரித்த போது, ‘மேயர் தேர்தலில் நிச்சயம் கோவையை கைப்பற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி. அதற்கேற்ப ஆட்களை நியமித்து வேலையில் இறக்கி விட்டார். குறிப்பாக இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக இப்பொழுதே அதற்கான ஆரம்ப பணிகளில் இறங்கிவிட்டார். 

கோவை இளைஞர்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லை என்று நிரூபிக்க இப்படியொரு திட்டத்தை தீட்டி வருகிறார் வேலுமணி.  திமுக சார்பில் மீனா லோகு , மீனா ஜெயக்குமார் மற்றும் அதிமுக சார்பில் சோனாலி பிரதீப்  ஆகியோர் மேயர் வேட்பாளர் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.இவர்களில் யாருக்கு சீட் தர வேண்டும் என்று இன்னும் இரண்டு தரப்பிலும் முடிவு செய்யப்படவில்லை. அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுகவும், திமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி அதிமுகவும் வெற்றிபெற துடித்துக்கொண்டிருக்கின்றன. மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தலா, மறைமுக தேர்தலா என்பதை இதுவரை, தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

என்னவாக இருந்தாலும் திமுகதான் கோவையை கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் கடுமையான உத்தரவிட்டிருக்கிறார்.அதனை நிறைவேற்ற, அதிமுக தரப்பில் பல கருப்பு ஆடுகளை விட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜியும், எஸ்.பி வேலுமணியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.பணத்திலும் சரி,அதிகாரத்திலும் சரி.கோவை தேர்தல் ‘களம்’ முதல்வரின் வருகைக்கு பிறகு இப்போதே சூடு பிடித்துள்ளதால், கோவை மாவட்டமே தேர்தல் விழா கோலம் போல் காட்சி அளிக்கிறது’ என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். 

 

click me!