MK Stalin : திமுக ஆட்சியின் ' 200' நாட்கள் - எப்படி இருக்கிறது 'முதல்வர்' ஸ்டாலினின் ஆட்சி ? ஒரு ரிப்போர்ட் !

By manimegalai aFirst Published Nov 24, 2021, 1:48 PM IST
Highlights

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 200 நாட்கள் ஆகிறது.முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி எப்படி இருக்கிறது ? ஆட்சியின் பிளஸ் - மைனஸ் என்ன ? என்பதை பார்ப்போம்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதலாக எல்லா ஊடகங்களும், தமிழக முதல்வரை  கொண்டாடித் தீர்க்கின்றன. அதிகாரிகள் நியமனம், கொரோனா நடவடிக்கைகள், இரவு 11 மணிக்கு கொரோனா வார் ரூமில் ஆய்வு,பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என வரிசையாக ‘சிக்ஸர்’ அடிக்கிறார் முதல்வர் என இன்று வரை ஊடகத்தின் பாராட்டில் மிதந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’  என்ற தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன். மக்களிடம் தரப்படும் படிவத்தில் பிரச்னைகளை எழுதித்தந்தால், திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். சொன்னதை செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார் மு.க ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து இன்றுடன் 200 நாட்கள் ஆகிறது. மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இருக்கிறதா ? என்று பார்ப்பது அவசியம்.
 

ஆகஸ்ட்-14 அன்று திமுக ஆட்சி அமைந்து ‘100’ நாட்கள் ஆகியது. அப்போது அறிக்கை விட்ட முதல்வர் ஸ்டாலின், “இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில்தான் நமது அரசு நூறாவது நாளை எட்டுகிறது. ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானதுதான். ஆனால், இந்த 100 நாட்களின் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காத்தல்,வலிமை கொண்ட துறையாக மக்கள் நல்வாழ்வுத் துறையை மாற்றுதல், மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு,கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 இலட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய், இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகைப் பொருட்கள், குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு,நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்குப் புத்துயிர்ப்பு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என முத்தான பத்துத் திட்டத்தை வழங்கி இருக்கிறோம்.

120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள், முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன். இந்த 100 நாட்களில் கழக அரசு செய்த சாதனைகளின் மூலமாக, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்’ முதல்வர் கூறினார்.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்பது, கரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, தமிழகத்தில் உள்ள முகாம்வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு என பல்வேறு நலத்திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை என்றாலும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி மூலமாக மனுக்களைப் பெற்றேன். இந்த மனுக்களை 100 நாட்களில் தீர்ப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கினேன். அப்படி நிறைவேற்றாவிட்டால் என்னைக் கேள்வி கேட்கலாம் என்றும் சொன்னேன். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனித்துறை உருவாக்கப்பட்டது. இதுவரை பெறப்பட்ட 4.57 லட்சம் மனுக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இத்துறை உருவாக்கப்பட்ட பத்தாவது நாள் முதலே கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கினோம். 

இதுவரை 2.29 லட்சம் மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொன்னாலும் அதை நிராகரிக்கவில்லை. அந்தக் கோரிக்கையை வைத்தவர்கள் அரசிடமே மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறோம்’ என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.முதல்வர் வாங்கிய மனுக்களுக்கு பெரும்பாலான இடங்களில் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள். மக்கள் கொடுத்த புகார்கள் மாநிலம்,மாவட்டம்,தாலுக்கா என வரிசைப்படுத்தப்பட்டு அந்தந்த இடத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு,குறிப்பாக யார் மீது புகார் கொடுக்கப்பட்டதோ, அவர்களிடமே  இப்புகார்கள் அனுப்பப்பட்டிருக்கிறது’ என்கின்றனர் பொதுமக்கள். 

அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சிக்காரர்கள் செய்த அட்டூழியங்கள், திரும்பவும் அவர்களுக்கே வருவதால், அந்த பிரச்சனை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்கின்றனர் மக்கள். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை பெரும்பாலான ‘ஊடகங்கள்’ இவர் சிக்ஸர் முதல்வர் என்ற தனிநபர் துதியை பாடி வருகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போராட்டங்கள், ஆன்லைன் தேர்வு கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம், நீட் தேர்வு ரத்து செய்யாதது, கல்விக்கடன் மற்றும் நகைக்கடன் போன்றவற்றை நிறைவேற்றாதது என மக்கள் போராடும், எதிர்க்கும் எந்தவொரு நிகழ்வுகளும் ஊடகத்திலோ,செய்தித்தாள்களிலோ வருவதில்லை. ஆட்சி அதிகாரத்தின் மீது இருக்கும் பயமா ? இல்லை திமுக ஆட்சியின் கைப்பாவை ஆகிவிட்டார்களா ? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து இருக்கிறது. 

முதல்வர் ஸ்டாலினின் 200 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று பொதுமக்களிடம் கேட்ட போது, ‘மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுப்போம் என்றார்கள் கொடுக்கவில்லை. பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்றால், 3 ரூபாய் மட்டுமே குறைத்திருக்கிறார்கள். டீசல் விலையைக் குறைக்கவில்லை. கல்விக் கடனை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்கள், அதையும் செய்யவில்லை.எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தார். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த முறை பொங்கல் பொருட்களுடன் அரசின் நிவாரண தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்’ என்கிறார்கள்.

எது எப்படியோ இதுவரை 200 நாட்களை கடந்திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான அரசு, கொரோனா,வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொண்டதில் பாராட்டுகளையும், வெள்ள நிவாரணம், கல்லூரி தேர்வு என சில குறைகளையும் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

click me!