அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் களேபரம்.. அன்வர் ராஜா மீது பாய்ந்த சி.வி சண்முகம்..???

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 1:34 PM IST
Highlights

சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறியதுடன் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துப் பேசியதால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறியதுடன் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துப் பேசியதால் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அன்வர் ராஜாவை தாக்க முறபட்டதாக வெளியான தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை  கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியதாகவும், அதனால் சிவி சண்முகம் அவரை தாக்க முற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதி படுத்தப்படாத தகவலாகவே உள்ளது. ஆனால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் கடும் சச்சரவு எழுந்த சப்தங்க்ள் கேட்டதாகக் கூறினர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி ஆட்சியைப் பறிகொடுத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது, இந்நிலையில் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். இதனால் அதிமுகவில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது. ஒருபுறம் கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களால் பலரும் கட்சியை விட்டு வெளியேறி வரும் நிலையில் அதிமுக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தற்போதைய கட்சி தலைமை மீது தொடர்ந்து அதிருப்தி வெளிபடுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி ஆவார். முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பியான இவர் தற்போது அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுக்கு எதிராக தனது கருத்துக்களை ஆணித்தரமாக கூறிவருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால்தான் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது என விமர்சித்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது இவர் சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தாலும், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். அதிமுக சார்பில் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது பின்னரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இவர், அதிமுக தலைமை வலிமை அற்றதாக உள்ளது. அதை வலுப்படுத்த சின்னம்மா சசிகலா பதவிக்கு வரவேண்டும் எனவ கூறி வருகிறார், சசிகலாவை கட்சியில் இணைப்பு தொடர்பாக கட்சி தலைமை ஆலோசிக்கலாம் என ஓபிஎஸ், செல்லூர் ராஜூ, ஜேசிடி பிரபகர் ஆகியோரும் கருத்து கூறி வரும் நிலையில், சசிகலா கட்சித் தலைமைக்கு வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நடந்து முடிந்த தேவர் குரு பூஜையில் இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் கலந்து கொள்ளாத நிலையில் தனியாளாக சென்று குருபூஜையில் தேவருக்கு மரியாதை செலுத்தினார் அன்வர்ராஜா. சசிகலா தரப்பினரும் அதிமுகவும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் யார் வேண்டுமானாலும் அதிமுக கொடி பிடிக்கலாம் என தொடர்ந்து கூறி வந்தார்.

அதேபோல அவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்கும் ஆடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி வருகிறது. எனவே எதிர்வரும் நகர்ப்புற தேர்தலில் எப்படி செயல்படுத்துவது, எப்படி தயாராவது என்பது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அப்போது அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலிதா புகைப்படங்களை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என கூறியதாகவும், மேலும் தற்போதைய கட்சி தலைமை வலு இல்லாமல் இருப்பதாகவும், எனவே அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியை சேர்க்கலாம் என்றும், இது குறித்து அனைத்து தரப்பினரும் பழைய விஷயங்களை மறந்து விட்டு சசிகலாவை சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என தனது கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்  அன்வர்ராஜா அவை தாக்க முற்பட்டதாகவும் அதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.ஆனாலும் இந்த தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!