
உதவி பேராசிரியர் பணிக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன் வழங்க கோவை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது ஏராளமான லஞ்ச புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கொடுக்கப்பட்டன. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் பொறிவைத்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சுரேஷ், என்பவருக்கு உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக லஞ்சம் பெற்றபோது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார்.
துணைவேந்தர் கணபதி மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.
இதையடுத்து ஜாமீன் கேட்டு துணைவேந்தர் கணபதி சார்பில் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பணி நியமனங்கள் குறித்து கணபதி மற்றும் தர்மராஜிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம், கணபதிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.