கோவையை தட்டி தூக்கும் செந்தில் பாலாஜி.. வலிமை காட்டுவரா எஸ்.பி வேலுமணி ? கோவை சீக்ரெட்ஸ் !

By Raghupati RFirst Published Jan 1, 2022, 9:40 AM IST
Highlights

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, கோவையை கைக்குள் கொண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பொறுப்பாளராக நியமித்ததற்கு பலனாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோட்டையான கோவையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. 

குறிப்பாக கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான். கோவையை அதிமுகவின் கோட்டையாகவும் மட்டுமல்லாமல் தன்னுடைய கோட்டையாகவும் நிறுவி திமுகவுக்கு சிம்மசொப்பனமாக வலம் வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

இதனால், திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் வெற்றி பெற்று திமுக ஸ்வீப் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிட ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என பொறுப்பாளர்களை நியமித்தார். 

இந்த நடவடிக்கைக்கு நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உடனடி பலன் கிடைத்தது. இதே போல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு பகுதியை திமுக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் முடுக்கி விட்டுள்ளார்.அதிலும் எஸ்.பி. வேலுமணியின் கோட்டையாக உள்ள கோவைக்கு, திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்துள்ளார். 

அவர் கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சிப் பணி செய்யவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என்பதால் அதிமுக அமைப்பில் உள்ள பலம், பலவீனம், அதோடு அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளுடன் நெருங்கி பேச முடியும் என்பது பெரிய பலமாக அமைந்துவிட்டது.

இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை அதிமுகவில் அதிருப்தியுடன் இருந்த முக்கிய நிர்வாகி, அதிமுக முன்னாள் எம்.பி கோவை நாகராஜனை திமுகவில் இணைத்துள்ளார். இதன் மூலம், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் கோட்டையான கோவையில் செந்தில் பாலாஜி முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிட்டத்தட்ட 1000 பேர் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியில் அதிமுக முன்னாள் எம்.பி கோவை நாகராஜன் திமுகவில் இணைந்துள்ளார்.அதிமுக, அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். அமமுகவில் இருந்து பழனியப்பன் அதிமுகவிலிருந்து பி.ஆர்.சுந்தரம், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோரும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவுக்கு சரிவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுகவில் பலமான ஆளுமையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோட்டையான கோவையில் இருந்து அதிமுகவின் முன்னாள் எம்.பி கோவை நாகராஜனை திமுகவுக்கு இழுத்து முதல் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருவது அதிமுகவுக்கு பெரிய சரிவில்லை என்றாலும் இது அதிமுக தலைமையை உலுக்கி இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.கோவை பீளமேட்டில் செந்தில் பாலாஜி வீடு வாங்கி குடியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோவை தேர்தலை எதிர்கொள்ள கோவை ஆட்களை மட்டும் நம்ப முடியாது எனவே கரூரில் இருந்து கட்சி தொண்டர்களை இறக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. வார்டுக்கு 100 பேர் என்று கணக்கு போட்டு, கோவை மற்றும் கரூர் ஆட்களை இணைத்து பக்கா ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த செய்தி அதிமுக முகாமில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள். ஒட்டு மொத்த கோவையையும் கைக்குள் கொண்டு வந்துவிட்டார் செந்தில் பாலாஜி. எஸ்.பி.வேலுமணி எந்த பிளான் செய்தாலும், வேலைக்கு ஆகாது என்று காலரை தூக்கிவிட்டு சொல்கிறார்கள் கோவை உபிக்கள்.

click me!