
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் கைது நடவடிக்கையை தவிர்க்க ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் போலீசார் அவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அவருடன் நெருக்கமாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவுக்கு தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் கார் டிரைவர் ஆறுமுகம், உதவியாளர் பொன்னுவேல் உள்பட 4 பேரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். அந்த 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து, விருதுநகர் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் ராமராஜ், மாவட்ட குற்றப்பிரிவு எஸ். ஐ. , பாலமுரளி, ஆமத்துார் எஸ். ஐ. , கார்த்திக் மற்றும் ஐந்து காவலர் என 8 பேர் அடங்கிய, தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.இப்பகுதியில், ''ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம், விசாரணை செய்து வருகிறோம், '' போலீசார் தரப்பில் கூறப்பட்டது.