அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..? முஸ்டி உயர்த்தும் கொங்கு மண்டல பாஜகவினர்!

By Asianet TamilFirst Published Jun 5, 2019, 7:44 AM IST
Highlights

தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும். அது நடக்காததால், மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்க பொன். ராதாகிருஷ்ணன் தயாரகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அவர் இருந்த இடத்துக்கு தமிழிசையை தலைவராக பாஜக மேலிடம் அறிவித்தது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழிசை தலைவராக செயல்பட்டுவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தோல்வி அடைந்தது. அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஐவருமே தோல்வி அடைந்ததால், கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்தது.


தற்போது தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து, கட்சி மேலிடத்துக்கு அறிக்கை அனுப்ப மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு தமிழக பாஜக தலைமையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைவர் பதவியைப் பிடிக்க கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும். அது நடக்காததால், மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்க பொன். ராதாகிருஷ்ணன் தயாரகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை என இருவருமே  தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த முறை கொங்கு மண்டலத்துக்கு அந்தப் பதவியைப் பெறவும் கட்சிக்குள் போட்டி நடப்பதாகவும் கூறப்படுகிறது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிறகு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தலைவர் பதவியைப் பிடிக்க முடியவில்லை. தற்போது அக்கட்சியின் தேசிய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இதேபோல கோவையைச் சேர்ந்த வானதி சீனிவாசனும் அந்த ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியை வளர்க்கும் விதத்திலும், மக்களை ஈர்க்கும் வகையிலும் இரு ஆண்டுகளில் நடைபெற சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டும் தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் ஆலோசித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!